மாவட்ட செய்திகள்

செவ்வாய் கிரகம் மனித வாழ்க்கைக்கு நண்பனா? எதிரியா? + "||" + Is Mars Earth Friendly for Human Life?

செவ்வாய் கிரகம் மனித வாழ்க்கைக்கு நண்பனா? எதிரியா?

செவ்வாய் கிரகம் மனித வாழ்க்கைக்கு நண்பனா? எதிரியா?
செவ்வாய் கிரகம் மிகவும் அதிகமான குளிர்ச்சி மற்றும் கதிர்வீச்சையும் கொண்டது.
உலகத் தோற்றத்துக்கும், மனித வாழ்க்கைக்கும் நீர் இன்றியமையாத ஒன்று என்பது நாம் அனைவரும் அறிந்தது தான். ‘நீரின்றி அமையாது உலகு’ என்று பொய்யாமொழிப்புலவர் திருவள்ளுவரே சொல்லியிருக்கிறார். ஆனால், பூமிக்கு அடுத்த மனிதனின் புகலிடமாய் கருதப்படும் செவ்வாய் கிரகத்தில், ‘தண்ணீரால் ஆன ஒரு பெரிய ஏரியே இருக்கிறது’ என்ற ஒரு சமீபத்திய செய்தியைக் கேட்கும்போது, ‘நீரின்றி அமையாது செவ்வாய் கிரகம்’ என்று கூடச் சொல்லலாம் என்றே தோன்றுகிறது.

செவ்வாய் கிரகத்தின் தண்ணீர் ஏரி குறித்த நல்ல சேதி வந்திருக்கும் அதேசமயம், செவ்வாய் கிரகத்தின் ‘மண்’ணானது பூமியில் உள்ள மிகவும் வறண்ட மண்ணை விட சுமார் ‘1000 மடங்கு’ வறண்டு காணப்படுகிறது’ என்ற ஒரு கெட்ட செய்தியும் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் ஏரி ஒன்று இருக்கும் செய்தியைப் பார்த்த மாத்திரத்தில், ‘சரி வாங்க எல்லாரும், செவ்வாய் கிரகத்துக்கு கிளம்பலாம்’ என்று தங்களின் பெட்டிப் படுக்கைகளை எல்லாம் தூக்கிக்கொண்டு செல்லும் அளவுக்கு உற்சாகத்தில் இருக்கும் மக்களுக்கு செவ்வாய் கிரகத்தின் வறண்ட மண் குறித்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தலாம். இருந்தாலும், உண்மை அதுதான் என்று உறுதி செய்துள்ளது நாசாவின் எமீஸ் ரிசெர்ச் செண்டரின் (Ames Research Center) விண்வெளி ஆய்வாளர் மேரி பெத் வில்ஹெல்ம் தலைமையிலான சர்வதேச ஆய்வுக்குழுவினர் மேற்கொண்ட ஒரு சமீபத்திய ஆய்வு.

பூமியின் இரட்டை சகோதரியாகக் கருதப்படும் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் கொஞ்சமேனும் இருந்துவிடாதா என்று ஆய்வாளர்கள் முதல் பொதுமக்கள் வரை அனைவரும் ஏங்கிய காலம்போய் தற்போது ஒரு பெரிய ஏரியே இருக்கிறது என்பது உறுதி செய்யப்பட்டுவிட்டது. ஆனாலும், செவ்வாய் கிரகத்தின் மொத்த சுற்றுச்சூழலின் தன்மையை முழுமையாக ஆய்வு செய்து பார்த்தால், செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் மட்டும் இருந்துவிட்டால் மனித வாழ்க்கை அங்கு சாத்தியப்பட்டு விடாது எனும் உண்மை விளங்கும்.

உதாரணமாக, செவ்வாய் கிரகம் மிகவும் அதிகமான குளிர்ச்சி மற்றும் கதிர்வீச்சையும் கொண்டது. அதனுடன் சேர்த்து தற்போது கண்டறியப்பட்டுள்ள செவ்வாயின் மிகவும் வறண்ட மண் குறித்த தகவலானது ‘எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றுவது’ போலத்தான் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், இந்த ஆய்வில் மிகவும் வறண்ட செவ்வாய் கிரக மண்ணில் நுண்ணுயிர்களால் வாழ முடியுமா என்றும், அவற்றின் உயிரணு அமைப்பு எந்த வகையில் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் ஆய்வு செய்யப்பட்டது. இதற்காக, வருடத்தில் வெறும் 3 மில்லிமீட்டர் மழை மட்டுமே பொழியும் தென் அமெரிக்காவிலுள்ள சிலி நாட்டின் (உலகின் மிக மிக வறண்ட பகுதியான) அடாகாமா பாலைவனத்தில் நுண்ணியிர்கள் தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மிகவும் குறைவான ஈரப்பதத்தில் உயிர்கள் இருக்கின்றனவா என்பதை ஆய்வு செய்ய மிகவும் பொருத்தமான இடமாகக் கருதப்படும் அடாகாமா பாலைவனத்தின் அன்டோபாகஸ்டா (Antofagasta region) பகுதியில் இந்த நுண்ணுயிர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பகுதி செவ்வாய் கிரகத்தின் நகலாக கருதப்படுவது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்தப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் நுண்ணுயிர்களின் வளர்ச்சி மற்றும் இனவிருத்தியும் பரிசோதிக்கப்பட்டது.

முக்கியமாக, பூமியில் அங்கிங்கெனாதபடி எங்கும் நுண்ணுயிர்கள் நிறைந்திருக்கின்றன. அந்த வகையில், மிகவும் வறண்ட பகுதியில் உள்ள நுண்ணுயிர்கள் உறங்கும்/செயற்படா நிலையில் (அதாவது உயிரை கையில் பிடித்துக்கொண்டு இருப்பது போன்ற நிலையில்) இருக்கின்றனவா, அல்லது நன்றாக வாழ்கின்றனவா என்று கண்டறிவது அவசியம். பூமியில் உள்ள மிகவும் வறண்ட பகுதி நுண்ணுயிர்களின் தன்மை குறித்த உயிரியல் தகவல்கள், அதற்கு நிகரான செவ்வாய் கிரகத்தில் நுண்ணுயிர்கள் இருந்தனவா? மற்றும் தற்போது வரை உயிரோடு இருக்கின்றனவா போன்ற உண்மைகளைக் கண்டறிய உதவும் என்கிறார் ஆய்வாளர் மேரி.

இந்த ஆய்வில், அன்டோபாகஸ்டா பகுதியில் சேகரிக்கப்பட்ட நுண்ணுயிர்களின் உடலில், உயிரணுவில் உளைச்சல் தொடர்பான புரதங்கள் (stress markers) இருக்கின்றனவா என்று பரிசோதிக்கப்பட்டது. ஏனென்றால், உறங்கும் நிலையில் இருக்கும் நுண்ணுயிரிகளின் உடலில் உளைச்சல் புரதங்கள் காணப்படுவதில்லை. முக்கியமாக, நுண்ணுயிரி உயிரணுக்களின் வெளிச்சவ்வில் உள்ள (உளைச்சல்களால் உறுதியாக மாறும் தன்மை கொண்ட) கொழுப்பு அமைப்புகள் ஆய்வு செய்யப்பட்டன. சுவாரசியமாக, குறைவான வறட்சி உள்ள பகுதிகளில் சேகரிக்கப்பட்ட நுண்ணுயிரிகளின் உடலில் உளைச்சல் புரதங்கள் இருந்தது கண்டறியப்பட்டது.

மிகவும் விநோதமாக, அடாகாமா பாலைவனத்தின் மிகவும் வறண்ட (செவ்வாய் கிரகத்தை ஒத்த) மற்றும் அதீத உளைச்சலை ஏற்படுத்தக்கூடிய பகுதியில் சேகரிக்கப்பட்ட நுண்ணுயிரிகளின் உடலில் உளைச்சல் புரதங்கள் காணப்படவில்லை.

இந்த ஆய்வு முடிவுகளில் கண்டறியப்பட்ட உயிரியல் உண்மைகள்: (1) மிகக் குறைவான தண்ணீர் இருந்தால் போதும் நுண்ணுயிர்களால் வளர முடியும். ஆனால் மற்றொருபுறம், (2) மிக மிக வறண்ட பகுதிகளில் உள்ள நுண்ணுயிர்களால் உயிரோடு இருக்க முடியும். ஆனால் வளரவோ, இனவிருத்தி செய்யவோ முடியாது!

ஆக மொத்தத்தில், செவ்வாய் கிரகத்தில் ‘இதமான சூடு மற்றும் ஈரப்பதம் கொண்ட சுற்றுச்சூழல்’ இருந்த காலத்தில் நுண்ணுயிர்கள் வாழ்ந்திருந்தால், அவற்றின் எச்சம் இன்னும் இருக்கும். மேலும், செவ்வாய் கிரகத்தின் பண்டைய கால உயிர்களின் ரகசியத்தை வெளிக்கொணரவும், மனிதர்கள் செவ்வாய் கிரக வாழ்க்கைக்கு எந்த வகையில் தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதையும் கண்டறிய இதுபோன்ற செவ்வாய் கிரக ஆய்வுகள் உதவும் என்கிறார் ஆய்வாளர் மேரி பெத் வில்ஹெல்ம். 

தொடர்புடைய செய்திகள்

1. ‘இன்சைட்’ விண்கலம் செவ்வாய்க் கிரகத்தில் தரையிறங்குகிறது
‘இன்சைட்’ விண்கலம் செவ்வாய்க் கிரகத்தில் தரையிறங்குகிறது. இது டைம்ஸ் சதுக்கத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
2. செவ்வாய் கிரகத்தின் வெள்ளை மேகம்...
திருமணத்தை மிக நெருக்கத்தில் வைத்துக் கொண்டு நிலை கொள்ளாமல் இருக்கும் பெண்ணின் நிலைதான் பூமியிலிருந்து செவ்வாய் கிரகம் அல்லது நிலவு போன்ற விண்வெளி அமைப்புகளில் போய் குடியேறி வாழவேண்டும் என்ற கனவுகள் மற்றும் கற்பனைகள் கொண்ட மனிதர்களின் நிலையும்.
3. செவ்வாய் பயணத்தில் பாதி தூரம் கடந்த விண்கலம்
செவ்வாய்க் கிரகம் நோக்கிச் செல்லும் ‘நாசா’வின் விண்கலம் பாதி தூரத்தைக் கடந்திருக்கிறது.
4. பல ஆண்டுகளுக்கு பின் பூமிக்கு மிக அருகில் செவ்வாய் கிரகம் இன்று வருகிறது
சூரிய குடும்பத்தில் 4–வதாக இடம் பெற்று இருப்பதும், பூமிக்கு அருகில் உள்ளதுமான செவ்வாய் கோள், சிவப்பு கிரகம் என அழைக்கப்படுகிறது.
5. செவ்வாய் கிரகத்தில் மிகப்பெரிய ஏரி கண்டுபிடிப்பு
செவ்வாய் கிரகத்தில், தண்ணீர் இருப்பதற்கான அறிகுறியை தெரிந்து கொள்வதில் உலகம் முழுவதும் விஞ்ஞானிகள் ஆர்வமாக உள்ளனர்.