குழந்தைகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகளுக்கு குடற்புழு ஒழிப்பு மாத்திரை இன்று வழங்கப்படுகிறது


குழந்தைகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகளுக்கு குடற்புழு ஒழிப்பு மாத்திரை இன்று வழங்கப்படுகிறது
x
தினத்தந்தி 10 Aug 2018 3:00 AM IST (Updated: 9 Aug 2018 7:02 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகள் முதல் பள்ளி, கல்லூகளில் பயிலும் மாணவ–மாணவிகளுக்கு இன்று(வெள்ளிக்கிழமை)குடற்புழு ஒழிப்பு மாத்திரை வழங்கப்படுகிறது.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகள் முதல் பள்ளி, கல்லூகளில் பயிலும் மாணவ–மாணவிகளுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) குடற்புழு ஒழிப்பு மாத்திரை வழங்கப்படுகிறது.

குடற்புழு மாத்திரை

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், சுகாதாரத்துறையின் மூலம் 1 முதல் 19 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு குடற்புழு ஒழிப்பு மாத்திரை வழங்குவது தொடர்பான முன்னேற்பாடு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலெக்டர் பேசும் போது கூறியதாவது;–

குழந்தைகளுக்கு வயிற்று குடற்புழுவை தடுக்க தமிழகம் முழுவதும் ‘‘அல்பென்ட்சோல்“ என்கிற குடற்புழு ஒழிப்பு மாத்திரை ஒரு வயது குழந்தை முதல் 19 வயது வரை உள்ளவர்களுக்கு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி தூத்துக்குடி மாவட்ட பகுதியில் இந்த மாத்திரை 49 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 10 நகர்நல மையங்கள் மூலமாக ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் மூலம் குடற்புழு நீக்க நாளான இன்று (வெள்ளிக்கிழமை) வழங்கப்பட உள்ளது.

5¼லட்சம் பேருக்கு...

மாவட்ட பகுதியில் உள்ள ஒன்று முதல் 19 வயது வரையுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் 1,583 பள்ளிகளில் படிக்கும் 4 லட்சத்து 2 ஆயிரத்து 361 மாணவ–மாணவிகள், 1,477 அங்கன்வாடி மையத்திலுள்ள 82 ஆயிரத்து 308 குழந்தைகள், 6 முதல் 19 வயது வரை உள்ள மாணவ–மாணவிகள் மற்றும் கல்லூரி மாணவ–மாணவிகள் 42 ஆயிரத்து 44 உள்ளிட்ட மொத்தம் 5 லட்சத்து 26 ஆயிரத்து 713 பேருக்கு இந்த மாத்திரை வழங்கப்பட உள்ளது.

பள்ளி ஆசிரியர்கள், அங்கன்வாடி மைய பொறுப்பாளர்கள் இந்த மாத்திரையை குழந்தைகளுக்கு மதியம் சாப்பாட்டிற்கு பின் வழங்க வேண்டும். ஓன்று முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அரை மாத்திரையும், 2 முதல் 19 வயது வரை உள்ளவர்களுக்கு ஒரு மாத்திரையும் வழங்க வேண்டும். இன்று மாத்திரை சாப்பிட முடியாத குழந்தைகளுக்கு வருகிற 17–ந்தேதி மாத்திரை கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பணிகளை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செய்திட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

யார்–யார்?

இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர்கள் கீதாராணி, போஸ்கோ ராஜா, துணை இயக்குனர் (காசம்) சவுந்தரராஜன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் திட்ட அலுவலர் முத்துலட்சுமி, குழந்தைகள் நல மருத்துவர் பத்மநாபன், மருத்துவ அலுவலர்கள் ராமசுப்பிரமணியன், ஹேமலதா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story