கதவை உடைத்து பணம் நகை கொள்ளை; மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு


கதவை உடைத்து பணம் நகை கொள்ளை; மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 10 Aug 2018 2:30 AM IST (Updated: 9 Aug 2018 8:15 PM IST)
t-max-icont-min-icon

கடையநல்லூரில் கதவை உடைத்து பணம், கவரிங் நகை கொள்ளை. மேலும் 2 வீடுகளில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

கடையநல்லூர்,

கடையநல்லூரில் கதவை உடைத்து பணம், கவரிங் நகை கொள்ளை. மேலும் 2 வீடுகளில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கதவை உடைத்து கொள்ளை

கடையநல்லூர் அல்லீமுப்பன் தெருவை சேர்ந்தவர் துலுக்கமத்தி அபூபக்கர். இவர் வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார். இவர் வெளிநாட்டில் இருந்து தனது ஊருக்கு திரும்பினார். அவரை அழைத்து வர அவரது குடும்பத்தினர் அனைவரும் வீட்டை பூட்டிவிட்டு திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு சென்றனர். இதை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் கதவை உடைத்து வீட்டில் இருந்த நகைகள், பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இந்நிலையில் அபூபக்கர் குடும்பத்தினர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோக்கள் உடைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த ரூ.2,000, கவரிங் நகைகளும் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

கொள்ளை முயற்சி

இதேபோல் காயிதே மில்லத் தெருவில் உள்ள உஸலாத்தன் அபூசாலிஹ் வீட்டிலும், ஆலிம்ஷா தெருவை சேர்ந்த கருப்பமூப்பன் அபூதாஹிர் வீட்டிலும் இரவில் மர்மநபர்கள் வீட்டில் உள்ள பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயற்சித்துள்ளனர். இவர்கள் வீட்டில் நகை, பணம் எதுவும் இல்லாததால் வீட்டில் இருந்த பொருட்களை வீசி எரிந்து விட்டு சென்றுள்ளனர்.

போலீசார் விசாரணை

ஒரே நாளில் கடையநல்லூரில் ஒரு வீட்டில் கொள்ளையும், 2 வீடுகளில் கொள்ளை முயற்சியும் நடந்துள்ளதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவங்கள் குறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.


Next Story