உடல் பருமனை மற்றவர்கள் கிண்டல் செய்ததால் பிளஸ்–1 மாணவி, தீக்குளித்து தற்கொலை


உடல் பருமனை மற்றவர்கள் கிண்டல் செய்ததால் பிளஸ்–1 மாணவி, தீக்குளித்து தற்கொலை
x
தினத்தந்தி 9 Aug 2018 5:40 PM GMT (Updated: 9 Aug 2018 5:40 PM GMT)

தான் உடல் பருமனாக இருப்பதை மற்றவர்கள் கேலி, கிண்டல் செய்ததால் மனம் உடைந்த பிளஸ்–1 மாணவி, தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

தாம்பரம்,

சென்னையை அடுத்த பல்லாவரம் அருகே உள்ள திருநீர்மலை ரங்கா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ்பாபு. இவருடைய மகள் கல்பனா(வயது 16). இவர், குரோம்பேட்டையில் உள்ள ஒரு அரசு பள்ளியில் பிளஸ்–1 படித்து வந்தார்.

நேற்றுமுன்தினம் இரவு தனது பெற்றோர் தூங்கிய பிறகு, வீட்டின் சமையல் அறைக்கு சென்ற மாணவி கல்பனா, திடீரென அங்கிருந்த மண்எண்ணெய்யை தனது உடலில் ஊற்றி தீக்குளித்தார். உடல் முழுவதும் தீ பரவியதால் வலியால் அலறி துடித்தார்.

அவரது அலறல் சத்தம்கேட்டு எழுந்து ஓடிவந்த அவரது பெற்றோர், மகளின் உடலில் எரிந்த தீயை அணைத்தனர். பின்னர் பலத்த தீக்காயம் அடைந்த அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டபிறகு மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அவரை சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை மாணவி கல்பனா பரிதாபமாக உயிரிழந்தார்.

இது தொடர்பாக சங்கர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், மாணவி கல்பனா உடல் பருமனாக இருந்ததால், அதை மற்றவர்கள் கேலி, கிண்டல் செய்ததாகவும், இதனால் மனம் உடைந்த அவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதும் விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story