மாவட்ட செய்திகள்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் வெள்ளத்தடுப்பு பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு + "||" + In Kancheepuram district Regarding flooding works Collector survey

காஞ்சீபுரம் மாவட்டத்தில் வெள்ளத்தடுப்பு பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு

காஞ்சீபுரம் மாவட்டத்தில் வெள்ளத்தடுப்பு பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு
காஞ்சீபுரம் மாவட்டத்தில் வெள்ளத்தடுப்பு பணிகள் மற்றும் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் பொன்னையா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டம், சோழிங்கநல்லூர் வட்டம் மற்றும் தாம்பரம் வட்டத்தில் அமைந்துள்ள பள்ளிக்கரணை மற்றும் கோவளம் வடிநில பகுதிகளில் அமைந்துள்ள, கடந்த கால பருவ மழையின்போது வெள்ளப் பாதிப்புக்குள்ளான பகுதிகளை மாவட்ட கலெக்டர் பொன்னையா பார்வையிட்டு, பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்தும், நிரந்தர வெள்ளத்தடுப்பு பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார்.


நாராயணபுரம் ஏரியில் புதியதாக அமைக்கப்பட்டு வரும் வெள்ள நீர்போக்கியை பார்வையிட்டு ஆய்வு செய்து, மேற்கொள்ளப்பட்டு வரும் நிரந்தர வெள்ளத்தடுப்பு பணிகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய இதர பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

கீழ்கட்டளை கால்வாய் ஒட்டியுள்ள காகிதபுரம், ஜட்ஜஸ் காலனி, எல்.ஐ.சி நகர், என்ஜினீயர்ஸ் அவென்யூ ஆகிய இடங்களை பார்வையிட்டு, கீழ்கட்டளை கால்வாயில் பலவீனமாக உள்ள கரைப்பகுதிகளை பலப்படுத்துமாறு பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு கலெக்டர்் அறிவுறுத்தினார்.

பிறகு, நன்மங்கலம் ஏரி, நன்மங்கலம் கால்வாய், கூடுவாஞ்சேரி ஏரி மற்றும் அதனை சார்ந்த வெள்ள பாதிப்புக்குள்ளான பகுதிகளை ஆய்வு செய்து நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து அறிவுரை வழங்கினார். பிறகு மாவட்ட கலெக்டர் பொன்னையா நிருபர்களிடம் பேசியதாவது.

நிரந்தர வெள்ளத் தடுப்பு பணிகளுக்காக காஞ்சீபுரம் மாவட்டத்திற்கு ரூ.84.70 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அவற்றுள் நாராயணபுரம் ஏரியில் இருந்து பள்ளிக்கரணை கழுவெளி பகுதி வரை மூடிய பெருவடிகால் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி சிட்லப்பாக்கம் பெருவடிகால்வாய் பணிக்கு ரூ.12 கோடியும், முடிச்சூர் சாலை முதல் அடையாறு வரை பெருவடிகால்வாய் பணிக்கு ரூ.20 கோடியும், பாப்பான் கால்வாய் அகலப்படுத்தும் பணிக்காக ரூ.7 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் முக்கிய நீர் வழித்தடங்களில் பருவ மழைக்கு முன்னர் தூர்வாரவும், நீர் தாவரங்களை அகற்றவும் அரசினால் ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணா, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ஆனந்த், சோழிங்கநல்லூர் தாசில்தார் பக்கியலட்சுமி, வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.