திருச்சி அண்டகொண்டான் பகுதியில் ரெயில் தண்டவாளம் அருகே தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்ட மாணவர்கள்


திருச்சி அண்டகொண்டான் பகுதியில் ரெயில் தண்டவாளம் அருகே தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்ட மாணவர்கள்
x
தினத்தந்தி 10 Aug 2018 4:15 AM IST (Updated: 10 Aug 2018 12:49 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி அண்டகொண்டான் பகுதியில் ரெயில் தண்டவாளம் அருகே தூய்மைப்படுத்தும் பணியில் மாணவர்கள் ஈடுபட்டனர்.

திருச்சி,

திருச்சி தென்னூர் அண்ட கொண்டான், ஆழ்வார் தோப்பு பகுதிகளின் வழியாக திருச்சி-ஈரோடு ரெயில் பாதை செல்கிறது. இந்த பாதை கடந்த சில மாதங்களுக்கு முன் மின் மயமாக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது இந்த தண்டவாளம் வழியாக இயக்கப்படும் ரெயில்கள் அனைத்தும் மின்சார என்ஜின்கள் மூலம் இயக்கப்பட்டு வருகிறது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள உயர் அழுத்த மின் பாதையினால் இப்பகுதி மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கவேண்டும் என்பதற்காக தண்டவாளம் அருகில் 8 அடி உயரத்தில் மதில் சுவர் கட்டுவதற்கு ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்து உள்ளது. இதற்காக அளவீடு செய்யும் பணிகள் முடிவடைந்து உள்ளன.

மதில் சுவர் அமைக்கப்பட்டால் இப்பகுதியில் நூற்றுக் கணக்கான வீடுகள் மற்றும் கடைகள் இடிக்கப்படும் அபாயம் ஏற்படுவதோடு, பல ஆண்டு காலமாக பயன் படுத்தி வந்த பொது பாதை அடைக்கப்படும் சூழல் ஏற்படும் என்பதால் இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த சில நாட்களுக்கு முன் அங்குள்ள முகமது பூறா பள்ளி வாசல் எதிரில் தண்டவாளம் அருகே ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மேலும் திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளரையும் சந்தித்து பாதையை அடைக்கும் முடிவை ரெயில்வே நிர்வாகம் கைவிட வேண்டும் என கோரி மனு கொடுத்தனர்.

இதன் ஒரு பகுதியாக நேற்று அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் ஜமால் முகமது கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் ரெயில்வே தண்டவாளம் அருகில் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். குப்பை கூளங்கள், பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட மக்காத குப்பைகளை எடுத்து சென்றனர். பொது பாதையை ரெயில்வே நிர்வாகம் அடைக்காமல் இருப்பதற்காக எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை அகற்றும் பணியில் ஈடுபட்டதாக மாணவர்கள் தெரிவித்தனர். 

Next Story