ரேஷன் கடைகளுக்கு சென்று கைவிரல் ரேகை பதித்தால் மட்டுமே உணவுப்பொருள்
ரேஷன் கடைகளுக்கு சென்று, கார்டுதாரர்கள் கைவிரல் ரேகை பதித்தால் மட்டுமே உணவு பொருள் வழங்குவது என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்வது குறித்து தமிழக உணவு வழங்கல்துறை பரிசீலனை செய்து வருகிறது.
கோவை,
காகித ரேஷன் கார்டுகள் ஒழிக்கப்பட்டு, ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. ரேஷன் கடைகளில் பொருள் வாங்கியதும், கடை ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள எலெக்டிரானிக் கருவிகளில் ரேஷன் கார்டுதாரர் பெயர், கார்டு எண், பொருள் வாங்கிய விவரம் பதிவு செய்யப்படு கிறது. உணவு பொருள் வாங்கியது குறித்து கார்டுதாரர்களின் செல்போன் எண்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்படுகிறது.
பலர் உணவுப்பொருள் வாங்காத நிலையிலும், அவர்களின் செல்போனுக்கு உணவுப்பொருள் வாங்கியதாக குறுஞ்செய்தி வருவதாக புகார்கள் வருகிறது. முதியவர்கள், படிப்பறிவில்லாதவர்களின் ரேஷன் கார்டு விவரங்களை கடை ஊழியர்கள் தெரிந்துகொண்டு அவர்களின் பெயரில் பொருட்களை வரவு வைப்பதால் செல்போனுக்கு குறுஞ்செய்தி வருவதாக குற்றம்சாட்டப்படுகிறது. இதனால் நவீன தொழில்நுட்பங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டாலும் முறைகேடுகளை கட்டுப்படுத்த முடியாமல் அதிகாரிகள் திணறி வருகிறார்கள்.
எனவே முறைகேடுகளை தடுக்க, கார்டு உரிமையாளர்கள் ரேஷன் கடைக்கு வந்து கைவிரல் ரேகை பதித்தால் மட்டுமே உணவுப்பொருள் வழங்கும் முறையை (பயோமெட்ரிக்) நடைமுறைப்படுத்துவது குறித்து உணவு வழங்கல்துறை பரிசீலனை செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து உணவு வழங்கல்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
ரேஷன் பொருட்கள் வாங்க கைவிரல் ரேகை பதிக்கும் திட்டத்தை கொண்டு வர தனியார் நிறுவனங்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதை செயல்படுத்தினால் உணவுப்பொருள் வாங்காதவர்களுக்கு, வாங்கியதாக கடை ஊழியர்கள் பதிவு செய்ய முடியாது. மேலும் பொருட்கள் வாங்கியதற்கு எலெக்ட்ரானிக்கு எந்திரம் மூலம் ரசீது கொடுக்கும் முறையை கொண்டு தமிழக உணவு வழங்கல்துறை ஆலோசனை நடத்தி வருகிறது.
கோவை மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க தீவிர கண்காணிப்பு நடைபெறுகிறது. இந்த ஆண்டு இதுவரை 110 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதற்காக 511 இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோவை ரெயில்நிலையத்தில் கேரளாவுக்கு ரெயிலில் கடத்துவதற்காக வைக்கப்பட்டு இருந்த 1000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை மாவட்டம் முழுவதும் நடைபெற்ற சோதனையில் ரேஷன் கடத்தலில் ஈடுபட்ட 115 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 327 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை மாவட்டத்தில் போதிய அளவு உணவுப்பொருள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த மாதத் துக்கு 12,200 டன் ரேஷன் அரிசி, 1086 டன் கோதுமை, 1,400 டன் சர்க்கரை, 827 டன் பருப்பு, 652 டன் பாமாயில் ஆகியவை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story