பாரதிதாசன் பல்கலைக்கழகம் எதிரே 3 கடைகளில் தீ விபத்து; ரூ.5 லட்சம் பொருட்கள் சேதம்


பாரதிதாசன் பல்கலைக்கழகம் எதிரே 3 கடைகளில் தீ விபத்து; ரூ.5 லட்சம் பொருட்கள் சேதம்
x
தினத்தந்தி 9 Aug 2018 11:00 PM GMT (Updated: 9 Aug 2018 7:24 PM GMT)

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் எதிரே 3 கடைகள் தீப்பிடித்து எரிந்ததில் ரூ.5 லட்சம் பொருட்கள் சேதமடைந்தன.

மணிகண்டம்,

திருச்சி-புதுக்கோட்டை சாலையில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் எதிரே திருச்சி குண்டூரை சேர்ந்த செல்வம் என்பவர் சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள் பழுது பார்க்கும் கடை வைத்துள்ளார். இது தென்னங்கீற்றால் வேயப்பட்ட கடையாகும். இந்த கடையின் அருகே மண்டையூரை சேர்ந்த ராமலிங்கம் என்பவர் கான்கிரீட் கட்டிடத்தில் ஜெராக்ஸ் கடை வைத்துள்ளார்.

அதன் அருகே அதே பகுதியை சேர்ந்த செந்தில்வேல் என்பவர் உணவகம் வைத்து நடத்தி வந்தார். இந்த கடைகளின் முன்பும் கீற்று மற்றும் ஆஸ்பெஸ்டாஸ் சீட் மூலம் தாழ்வாரம் போடப்பட்டு இருந்தது. இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைந்த தகவல் அறிந்தவுடன் அனைவரும் கடையை அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை 3 மணியளவில் செல்வத்தின் மோட்டார் சைக்கிள் பழுது பார்க்கும் கடை திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ அருகில் இருந்த ஜெராக்ஸ் கடையிலும் பற்றி தீ ஜுவாலை மாடிக்கு பரவியது. அங்கு மாடி அறையில் உணவக தொழிலாளி பழனிசாமி கதவைத் திறந்து வைத்தவாறு தூங்கி கொண்டிருந்தார். திடீரென கண்விழித்து பார்த்த அவர் வேகமாக கீழே இறங்கி வந்து உணவகத்தில் இருந்த சிலிண்டர்களை அப்புறப்படுத்தினார். சிறிது நேரத்தில் உணவகத்திலும் தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கும் கடை உரிமையாளர்களுக்கும் பழனிசாமி தகவல் தெரிவித்தார்.

தகவலின்பேரில் அங்கு விரைந்து வந்த நவல்பட்டு தீயணைப்பு துறையினர் கடைகளில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். அதற்குள் அந்த கடைகளில் இருந்த பொருட்கள் எரிந்து கருகின. இந்த தீ விபத்தில் மோட்டார் சைக்கிள் பழுதுபார்க்கும் கடையில் இருந்த சைக்கிள்கள், மோட்டார் சைக்கிள்கள், வல்கனைசிங் எந்திரம் மற்றும் இரண்டு ஏர் கம்ப்ரசர், ஜெராக்ஸ் கடையில் இருந்த எந்திரம், உணவகத்தில் இருந்த 2 குளிர்சாதனப் பெட்டிகள், டி.வி., கண்காணிப்பு கேமரா மற்றும் பர்னிச்சர் பொருட்கள் என சுமார் ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்தன.

இந்த விபத்து குறித்து கடை உரிமையாளர்கள் நவல்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், இந்த தீ விபத்து மின்கசிவினால் ஏற்பட்டதா? அல்லது விஷமிகள் யாரும் தீ வைத்தார்களா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருவெறும்பூர் தாலுகா வருவாய் துறையினரும் தீ விபத்து நடந்த கடைகளை பார்வையிட்டு சேத மதிப்பை கணக்கெடுத்து சென்றனர். ஒரே நேரத்தில் 3 கடைகளில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story