பெரியமேட்டில் 300 கிலோ சுகாதாரமற்ற மாட்டிறைச்சி பறிமுதல்


பெரியமேட்டில் 300 கிலோ சுகாதாரமற்ற மாட்டிறைச்சி பறிமுதல்
x
தினத்தந்தி 10 Aug 2018 3:00 AM IST (Updated: 10 Aug 2018 1:06 AM IST)
t-max-icont-min-icon

சென்னை பெரியமேட்டில் உள்ள ஒரு கடையில் சுகாதாரமற்ற மாட்டிறைச்சி விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது.

சென்னை,

தமிழக அரசின் உணவு பாதுகாப்பு துறை நியமன அதிகாரி (சென்னை மாவட்டம்) கதிரவன் உத்தரவின்பேரில் சதாசிவம், ராஜா, ராஜாராம், கண்ணன், சுதாகர் உள்ளடங்கிய குழுவினர் அந்த கடையில் நேற்று சோதனை நடத்தினர்.

அப்போது மாட்டிறைச்சி சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. கெட்டுப்போகும் நிலையில் ஏராளமான இறைச்சி இருந்தது. குறிப்பாக கன்றுக்குட்டி கறிகளை சிறிது சிறிதாக வெட்டி ஆட்டுக்கறி என கூறி பெரிய ஓட்டல்களுக்கு சப்ளை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. கடைக்கு உரிமம் இல்லாததும் தெரியவந்தது.

இதையடுத்து கடையில் இருந்த 300 கிலோ அளவிலான சுகாதாரமற்ற இறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதனை கொடுங்கையூர் குப்பை கிடங்குக்கு கொண்டு சென்று கொட்டி அழித்தனர்.

முன்னதாக அந்த இறைச்சியின் மாதிரி கிண்டி உணவு பகுப்பாய்வு கூடத்துக்கு சோதனைக்காக அனுப்பப்பட்டது. சுகாதாரமற்ற இறைச்சியை விற்பனை செய்த கடை உரிமையாளர் மற்றும் பணியாளர்களை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Next Story