‘ஸ்மார்ட் ரேஷன்’ கார்டுகளில் முகவரி மாற்றம், பெயர் திருத்தம் செய்வது நிறுத்தம்


‘ஸ்மார்ட் ரேஷன்’ கார்டுகளில் முகவரி மாற்றம், பெயர் திருத்தம் செய்வது நிறுத்தம்
x
தினத்தந்தி 9 Aug 2018 9:45 PM GMT (Updated: 9 Aug 2018 7:40 PM GMT)

ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் முகவரி மாற்றம், பெயர் திருத்தம் செய்வது நிறுத்தப்பட்டு இருப்பதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.

கோவை,



கோவை மாவட்டத்தில் மொத்தம் 1,421 ரேஷன் கடைகள் உள்ளன. 9 லட்சத்து 99 ஆயிரம் ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் ஸ்மார்ட் ரேஷன்கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த கார்டுகள் வைத்து இருப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்படுகிறது. உணவுப்பொருள் வாங்கியதும், ரேஷன் கார்டுதாரர்களின் செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்படுகிறது.

வாடகை வீடுகளில் வசிப்பவர்கள் வீடு மாறும்போது புதிய முகவரிக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளை மாற்றுவதற்கு இ-சேவை மையங்கள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பித்து முகவரி மாற்றம் செய்து, ஸ்மார்ட் கார்டு பெறும் வசதி முன்பு இருந்தது. இதேபோல் பெயர் திருத்தமும் எளிதில் செய்யப்பட்டு வந்தது.

ஆனால் தற்போது இ- சேவை மையங்களில் முகவரி மாற்றம், பெயர் திருத்தம் செய்து புதிய கார்டு வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து இ-சேவை மையங்கள் முன்பும் அறிவிப்புகளை ஒட்டியுள்ளனர். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையரின் அறிவுறுத்தலின்படி, ஸ்மார்ட் ரேஷன்கார்டு அச்சிட்டு வழங்குதல் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் அரசு இ-சேவை மையங்களில் நிறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முகவரி மாற்றம் செய்ய முடியாததால் வாடகை வீடுதாரர்கள் வேறு வீடுகளுக்கு இடம்மாறி சென்றாலும், முன்பு வசித்த பகுதிகளுக்கு வந்தே உணவு பொருட்களை வாங்கும் சிரமமான நிலை ஏற்பட்டுள்ளது. பெயர் திருத்தம் செய்ய முடியாமலும் பலர் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

இந்த பிரச்சினை குறித்து மாவட்ட உணவு வழங்கல் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

ஆன்லைன் மூலம் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் முகவரி மாற்றம், பெயர் திருத்தம் செய்தாலும் அதனை இ-சேவை மையங்கள் மூலம் அச்சிட்டு பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் இந்த பிரச்சினைதான் உள்ளது. இதில் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்வதற்காக இந்த தாமதம் ஏற்பட்டு இருக்கலாம் என்று கருதுகிறோம். இந்த மாத இறுதிக்குள் இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

Next Story