சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி திருமணம் செய்து ஏமாற்றிய தொழிலாளிக்கு 14 ஆண்டு சிறை


சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி திருமணம் செய்து ஏமாற்றிய தொழிலாளிக்கு 14 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 10 Aug 2018 4:30 AM IST (Updated: 10 Aug 2018 2:21 AM IST)
t-max-icont-min-icon

சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி திருமணம் செய்து ஏமாற்றிய தொழிலாளிக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை மாவட்ட மகளிர் விரைவு கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை ஆராஞ்சிபுதூர் கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 22), தொழிலாளி. இவரும் திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியும் காதலித்து வந்துள்ளனர். கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை மாதம் 9-ந் தேதி சிறுமியிடம், குணசேகரன் ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து கொண்டார்.

பின்னர் திருப்பூரில் உள்ள சிறுமியின் சகோதரி வீட்டில் தங்கி குடும்பம் நடத்தி வந்து உள்ளனர். இதையடுத்து அவர், சிறுமியை அவரது சகோதரி வீட்டில் விட்டு, விட்டு சொந்த ஊருக்கு திரும்பினார். நீண்ட நாட்கள் ஆகியும் குணசேகரன், அந்த சிறுமியை பார்க்க செல்லவில்லை.

இதுகுறித்து சிறுமியின் தாய், குணசேகரனிடம் கேட்டபோது, உனது மகளுடன் வாழ முடியாது என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குணசேகரனை கைது செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு திருவண்ணாமலை மாவட்ட மகளிர் விரைவு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. நேற்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி நடராஜன், சிறுமியை ஏமாற்றிய குற்றத்திற்காக குணசேகரனுக்கு போக்சோ சட்ட பிரிவுகளின் கீழ் 14 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்தார். அபராத தொகை கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.இதையடுத்து குணசேகரனை போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் அர்ச்சனா வாதாடினார்.

Next Story