பட்டப்பகலில் கழுத்தை அறுத்து மூதாட்டி கொலை 4¾ பவுன் நகை திருட்டு


பட்டப்பகலில் கழுத்தை அறுத்து மூதாட்டி கொலை 4¾ பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 10 Aug 2018 4:45 AM IST (Updated: 10 Aug 2018 2:44 AM IST)
t-max-icont-min-icon

எருமப்பட்டி அருகே, பட்டப்பகலில் கழுத்தை அறுத்து மூதாட்டி கொலை செய்யப்பட்டார். அவர் அணிந்து இருந்த 4¾ பவுன் நகையை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றனர்.

எருமப்பட்டி,

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே பொட்டிரெட்டிப்பட்டியில் உள்ள கங்கானித் தெருவில் வசித்து வந்தவர் சண்முகம். இறந்து விட்டார். இவருடைய மனைவி அமராவதி (வயது 70). இவர்களுக்கு சேகர் (51), சுப்பிரமணி (48), ஞானபிரகாசம் (45) என 3 மகன்களும், ராஜேஸ்வரி (52) என்ற மகளும் உள்ளனர். அமராவதி தற்போது தனது 2-வது மகன் மற்றும் மகளுடன் வசித்து வந்தார். இவருடைய இரண்டாவது மகன் தனியார் கல்லூரியில் டிரைவராக வேலை செய்து வருகிறார். மகள் கூலி வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று காலை மகன் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார். மகளும் 9 மணியளவில் கூலி வேலைக்கு சென்று விட்டார். அமராவதி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். மாலை 4 மணியளவில் மகனும், மகளும் வேலை முடிந்து வீட்டுக்கு வந்து பார்த்தபோது, அமராவதி கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் அமராவதி கழுத்தில் அணிந்து இருந்த 4 பவுன் செயினும், காதை அறுத்து ¾ பவுன் தோடும் திருடப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இது குறித்து எருமப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாதையன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

இதற்கிடையில் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு, துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா, இன்ஸ்பெக்டர் தங்கவேல் உள்ளிட்டோரும் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் நகைக்காக இந்த கொலை நடந்து இருக்கலாம் என்றும், மகன், மகள் வேலைக்கு சென்ற பிறகு பட்டப்பகலில் மர்ம ஆசாமிகள் வீட்டுக்குள் புகுந்து மூதாட்டியை கொன்று நகையை பறித்து இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, துப்பு துலக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் இருந்து புதுக்கோட்டை சாலை வரை அங்கும், இங்கும் ஓடியது. ஆனால் யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை. இதேபோல தடயவியல் நிபுணர்களும், கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு வந்து அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்து சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் மூதாட்டி கொலை செய்யப்பட்டு, நகை திருடப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story