வாகன பதிவிற்கு ஒருங்கிணைந்த அதிவேக மென்பொருள்


வாகன பதிவிற்கு ஒருங்கிணைந்த அதிவேக மென்பொருள்
x
தினத்தந்தி 9 Aug 2018 10:00 PM GMT (Updated: 9 Aug 2018 9:36 PM GMT)

ராமநாதபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வாகன பதிவிற்கு ஒருங்கிணைந்த புதிய அதிவேக நவீன மத்திய சர்வர் மென்பொருளுடன் இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக வருகிற 14-ந்தேதி முதல் 7 நாட்கள் பதிவுகள் நிறுத்தப்படுகிறது.

ராமநாதபுரம், 



தமிழகம் முழுவதும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் இதுவரை வாகன்-1 மென்பொருள் மூலம் வரி வசூல், வாகன பதிவு, பதிவு சான்றிதழ் தொடர்பான அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு அந்தந்த அலுவலகங்களே விபரங்களை பாதுகாத்து வந்தன. இந்த முறையை மாற்றி நாடு முழுவதும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களை டிஜிட்டல் மயமாக்கி நவீன மென்பொருள் சர்வருடன் இணைத்து ஆன்லைன் மூலம் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி முதல்கட்டமாக ஓட்டுனர் உரிமம் தொடர்பான பணிகளை புதிய சாரதி மென்பொருள் மூலம் நாடு முழுவதும் ஆன்லைன் மூலம் ஒருங்கிணைத்து வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக வாகனங்கள் தொடர்பான வரிவசூல், வாகன பதிவு, பதிவு சான்றிதழ் பெறுவது போன்ற பணிகளை ஆன்லைன் மூலம் நாடு முழுவதும் மேற்கொள்ள புதிதாக அதிநவீன மின்னல் வேக வாகன்-4 என்ற மென்பொருள் சர்வர் உருவாக்கப்பட்டு செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள 146 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் இதுவரை 100 அலுவலகங்களில் இந்த மென்பொருள் நிறுவப்பட்டு ஆன்லைன் மூலம் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலகமும் இந்த புதிய மென்பொருளின் கீழ் கொண்டுவரப்பட உள்ளது. வருகிற 20-ந்தேதி முதல் புதிய வாகன்-4 மென்பொருள் மூலம் மட்டுமே ஆன்லைனில் வாகனங்கள் தொடர்பான பதிவு உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக 14-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை வாகனங்கள் தொடர்பான அனைத்து பதிவுகள், அலுவல் நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட உள்ளன.

அப்போது இதுவரை அலுவலகத்தில் பதிவான விவரங்கள் சேகரிக்கப்பட்டு மாநில மற்றும் மத்திய அலுவலக கட்டுப்பாட்டு அறைகளுக்கு அனுப்பி புதிய வாகன்-4 சர்வர் மென்பொருளில் பதிவு செய்யப்படும். 20-ந்தேதி முதல் ஆன்லைனில் புதிய சர்வர் மூலம் மட்டுமே வாகனங்கள் பதிவு தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்த புதிய சர்வர் மூலம் வாகனம் பதிவு செய்யும் போது பார்கோடுடன் பதிவு சான்றிதழ் உடனடியாக பெற முடியும்.

இதில் வாகனம் மற்றும் உரிமையாளர் விவரங்களில் திருத்தம் செய்ய மத்திய அலுவலகத்திற்கு தகவல் அனுப்பி தான் மேற்கொள்ள முடியும் என்பதால் திருட்டு வண்டிகளை விதி மீறி பதிவு செய்ய முடியாது. மேலும், வாகனத்தின் பதிவு சான்றிதழ் உரிமையாளர் விவரங்களை புதிய சர்வர் மூலம் எந்த பகுதியில் இருந்தும் தெரிந்து கொள்ள முடியும். இந்த தகவலை ராமநாதபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் செல்வகுமார் தெரிவித்தார். 

Next Story