மாவட்ட செய்திகள்

ஆடித்திருவிழாவையொட்டி சேலத்தில் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை பொங்கல் வைத்து வழிபாடு + "||" + Special Pooja Pongal is worshiped at Amman temples in Salem

ஆடித்திருவிழாவையொட்டி சேலத்தில் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை பொங்கல் வைத்து வழிபாடு

ஆடித்திருவிழாவையொட்டி சேலத்தில் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை பொங்கல் வைத்து வழிபாடு
ஆடித்திருவிழாவையொட்டி சேலத்தில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி திரளான பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.
சேலம்,

சேலம் மாநகரில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில் ஆடித்திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜையும், பக்தர்கள் பொங்கல் வைத்தும் வழிபாடு நடத்தி வருகிறார்கள். இதனால் சேலத்தில் உள்ள அம்மன் கோவில்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.


சேலம் பெரமனூர் நாலுகால் மண்டபம் அரசினர் காலனியில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் நேற்று காலை 7 மணிக்கு சக்தி அழைத்தலும், அதைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜை செய்யப்பட்டது. இதையடுத்து இரவில் திரளான பக்தர்கள் மாவிளக்கு, அக்னி கரகம், அலகு குத்தி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். மேலும், பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். மேலும், கோவில் முன்பு உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

சேலம் சாமிநாதபுரம் விநாயகர்-மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி கோவிலில் திருக்கடையூர் அபிராமி அம்மன், அமிர்தகடேசுவரர் அலங்காரமும், சமயபுரம் மாரியம்மன், சிவன்- பார்வதி, பாலமுருகன், பாலகணபதி, தர்பார் காளி அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது. சாமி நாதபுரம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். பக்தர்கள் பொங்கல் வைத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

இதேபோல், அன்னதானப்பட்டி மாரியம்மன், செவ்வாய்பேட்டை மாரியம்மன் உள்பட மாநகரில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில்களிலும் நேற்று ஆடித்திருவிழாவையொட்டி சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடைபெற்றது. பெண்கள் பலர் கோவிலுக்கு வந்து பொங்கல் வைத்து வழிபட்டனர். சிலர் ஆடு, கோழிகளை பலியிட்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். இதனால் கோவில்களில் வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா கடந்த மாதம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி தினமும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜைகள் நடத்தப்படுகிறது. இந்த நிலையில், விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பக்தர்கள் கோவிலில் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்துவது கடந்த 7-ந்தேதி இரவு முதல் தொடங்கியது.

நேற்று முன்தினம் 2-வது நாளாக ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்தனர். தொடர்ந்து 3-வது நாளாக நேற்றும் ஆயிரக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். அதே போன்று ஏராளமானவர்கள் மாவிளக்கு எடுத்து வந்திருந்தனர். தொடர்ந்து பொங்கல் பிரார்த்தனை செலுத்துதல் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று காலை முதல் இரவு வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

இதனால் கோவில் வளாகம் முழுவதும் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. வருகிற 14-ந்தேதி பால்குட விழா நடக்கிறது. தொடர்ந்து உற்சவர் அம்மனுக்கு அபிஷேகம், அலங்கார ஆராதனை நடக்கிறது.

இதே போன்று சேலம் 4 ரோடு அருகே நாராயணப்பிள்ளை தெருவில் உள்ள மாரியம்மன் கோவிலில் ஆடிப்பண்டிகை தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று கோவில் அருகே 13 அடி உயரத்தில் சமயபுரம் மாரியம்மன் சிலை வைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.