கல்குவாரியில் கிடந்த மண்டை ஓடு-திடீர் பரபரப்பு
கல்குவாரியில் கிடந்த மண்டை ஓட்டால் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகாசி,
சிவகாசி அருகே உள்ள செல்லையநாயக்கன்பட்டியில் கருப்பசாமி என்பவருக்கு சொந்தமான கல்குவாரி உள்ளது. இந்த கல்குவாரி செயல்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அங்கு மண்டை ஓடு ஒன்று கிடப்பதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தி மண்டை ஓட்டை கைப்பற்றி சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வுக்காக ஒப்படைத்தனர்.
பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் மண்டை ஓடு மட்டும் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. யாரையாவது கொலை செய்து உடலை புதைத்த நிலையில் மண்டை ஓடு வெளியே வந்துள்ளதா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மண்டை ஓடு கைப்பற்றப்பட்ட கல்குவாரியில் இருந்து ½ கிலோ மீட்டர் தூரத்தில் சுடுகாடு உள்ளது. அங்கிருந்த மண்டை ஓட்டை யாராவது கொண்டு வந்து கல்குவாரியில் வைத்துவிட்டு சென்று விட்டனரா என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது குறித்து வி.சொக்கலிங்கபுரம் கிராம நிர்வாக அலுவலர் மகேஸ்வரி சிவகாசி கிழக்கு போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story