அனைத்து கிராமங்களுக்கும் மானியத்தில் பயறு விதைகள் வழங்க வேண்டும்


அனைத்து கிராமங்களுக்கும் மானியத்தில் பயறு விதைகள் வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 10 Aug 2018 3:38 AM IST (Updated: 10 Aug 2018 3:38 AM IST)
t-max-icont-min-icon

டி.கல்லுப்பட்டி ஒன்றியத்தில் அனைத்து கிராமங்களுக்கும் மானியத்தில் பயறு விதைகள் வழங்கவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பேரையூர்,


டி.கல்லுப்பட்டி ஒன்றியத்தில் 42 ஊராட்சிகள் உள்ளன. இந்த பகுதிகள் அனைத்தும் கோடை மற்றும் பருவ மழையை நம்பியே உள்ளன. இப்பகுதி விவசாயிகள் 70 சதவீதம் மானாவாரி விவசாயத்தையே நம்பி வாழ்கின்றனர். வருடந்தோறும் நன்றாக மழை பெய்தால் சுமார் 25 ஆயிரம் முதல் 30 ஏக்கர் வரை மானாவாரி விவசாயம் செய்வார்கள். பெரும்பாலான விவசாயிகள் வட்டிக்கு பணம் வாங்கியும், நகைகளை அடகு வைத்தும் தான் மானாவாரி விவசாய பயறு விதைகளை விதைப்பார்கள்.

பெரும்பாலான இடங்களில் விதைப்பு பணிக்கு விவசாயிகள் தயாராக உள்ளனர். பாதி அளவு விவசாயிகள் வேளாண்மை அலுவலகத்திலும், பாதி அளவு விவசாயிகள் தனியார் உரக்கடைகளிலும், விதைகள் வாங்குவது வழக்கமான ஒன்று ஆகும். தற்போது டி.கல்லுப்பட்டி வேளாண்மை அலுவலகத்தில் மானியத்தில் வழங்க பயறு விதைகள் உள்ளன. ஆனால் இங்கு குறிப்பிட்ட பகுதி கிராமங்களுக்கு மட்டுமே அரசு விதிப்படி மானிய த்தில் பயறு விதைகள் வழங்கப்படுகின்றன.

மானாவாரி மேம்பாட்டு திட்டத்தில் மத்தக்கரை, கெஞ்சம்பட்டி, காரைகேணி, வேளாம்பூர் ஆகிய ஊராட்சிகளில் உள்ள 15 கிராமங்களில் 7,500 ஏக்கருக்கு மட்டுமே பயறு விதைகள் மானியத்தில் வழங்கப்படுகிறது. ஆனால் மீதம் உள்ள ஊராட்சியை சேர்ந்த கிராமங்களுக்கு மானியத்தில் வழங்கப்படுவதில்லை என்று விவசாயிகள் வேதனை அடைகின்றனர்.

இதுகுறித்துஅ.தொட்டியபட்டி விவசாயிகள் மகாலிங்கம், சோணை, வன்னிவேலாம்பட்டி முருகன் ஆகியோர் கூறும்போது, அரசு விதிப்படி என்று திட்டத்தின் மூலம் குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டுமே மானியத்தில் பயறு விதைகள் வழங்குகின்றனர். மிக அதிகமாக மானாவாரி விவசாயம் செய்யும் எங்கள் பகுதிக்கு தரவில்லை. இதனால் அதிக விலை கொடுத்து தனியார் கடைகளில் பயறு விதைகள் வாங்க கூடிய சூழ்நிலையில் உள்ளோம். அனைத்து பகுதி கிராமங்களுக்கு மானியத்தில் பயறு விதைகள் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். 

Next Story