கிணற்றில் தவறி விழுந்த விவசாயி பலி; மனைவி படுகாயம்
செஞ்சி அருகே நீர்மூழ்கி மோட்டாரை இடம் மாற்றி அமைக்க முயன்றபோது விவசாயி கிணற்றில் தவறி விழுந்து இறந்து போனார். அவரது மனைவி படுகாயமடைந்தார்.
செஞ்சி,
செஞ்சி அருகே உள்ள மேல்வெங்கமூர் கிராமத்தை சேர்ந்தவர் மணி(வயது40), விவசாயி. இவர் தனக்கு சொந்தமான விவசாய கிணற்றில் நீர்மூழ்கி மோட்டார் பொருத்தி இருந்தார். தற்போது கிணற்றில் நீர்மட்டம் குறைந்து போனது. இதையடுத்து மணி, நீர்மூழ்கி மோட்டாரை வேறு இடத்துக்கு மாற்ற முடிவு செய்தார். அதன்படி நேற்று காலை மணி தனது மனைவி கலைவாணியுடன் (37) கிணற்றின் மேல்பகுதியில் நின்றபடி கயிறு மூலம் நீர்மூழ்கி மோட்டாரை இடம் மாற்றி அமைக்கும் பணியில் ஈடுபட்டார்.
அப்போது கணவன்-மனைவி இருவரும் எதிர்பாராதவிதமாக கிணற்றில் தவறி விழுந்தனர். இதில் பலத்த காயமடைந்த மணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த கலைவாணி அபயக்குரல் எழுப்பினார். இதைகேட்ட அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து கலைவாணியை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இதனிடையே தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அனந்தபுரம் போலீசார் கிணற்றில் கிடந்த மணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நீர்மூழ்கி மின்மோட்டாரை இடமாற்றி அமைக்க முயன்றபோது விவசாயி கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அக்கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story