பாம்புகள் அழிவதை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்
அமிர்தியில் நடந்த மலைவாழ் மக்கள் தின விழாவில், பாம்புகள் அழிவதை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என அமிர்தி வனச்சரக அலுவலர் ராஜா கூறினார்.
அடுக்கம்பாறை,
வேலூர் அருகே உள்ள அமிர்தி சிறு வன உயிரின பூங்காவில் மான், முயல், நரி, முதலை, மயில், அரியவகை குரங்குகள், பறவை வகைகள், முள்ளம்பன்றி, பாம்புகள் உள்ளிட்டவைகள் உள்ளன. இவற்றை பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு வருகின்றனர்.
மேலும் ஞாயிற்றுக்கிழமை தோறும் சுற்றுலா பயணிகள் அமிர்தி மலை கிராமங்களுக்கு அழைத்து செல்லப்பட்டு, மலையில் உள்ள இயற்கை நீரூற்றுகள், தீர்த்த சுனைகள், மொசைக் வனப்பகுதி உள்ளிட்டவைகளை பார்த்து ரசிக்கின்றனர். மேலும், மலைவாழ் மக்களின் வாழ்க்கை முறையை தெரிந்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அமிர்தி பூங்காவில் உலக மலைவாழ் மக்கள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதில் அமிர்தி வனச்சரக அலுவலர் ராஜா தலைமையிலான வனக்குழுவினர் மற்றும் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் பாம்புகள் அழிவதை தடுக்க மலைவாழ் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் பாம்புகளை பிடித்து காட்டில் விடுவது குறித்து செயல் விளக்கம் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் அமிர்தி வனச்சரக அலுவலர் ராஜா பேசியதாவது-
அமிர்தி வனப்பகுதியில் ஏராளமான பாம்புகள் உள்ளன. மக்கள் வாழ்கின்ற பகுதிகளில் நாக பாம்பு, கண்ணாடி விரியன், சுருட்டு விரியன், சாரை பாம்பு உள்ளிட்டவைகள் சுற்றித்திரிகின்றன. பெரிய ராஜநாக பாம்புகள் மேற்கு தொடர்ச்சி மலையில் அடர்ந்த காட்டில்தான் உள்ளது.
சாரை பாம்புக்கு விஷம் கிடையாது. அதனை கண்டு யாரும் பயப்பட வேண்டாம். பாம்பை அடித்தால் மற்றொரு பாம்பு வந்து பழிவாங்கும் என்பது மூட நம்பிக்கை. பாம்பை அடிக்கும் போது அதிலிருந்து வெளியாகும் மலம் வாடையில் மற்ற பாம்புகள் அந்த இடத்திற்கு வந்து செல்லும்.
முட்டை, பால் வைத்தால் பாம்பு குடித்துவிட்டு செல்லும் என்பதை நம்பாதீர்கள். மாணிக்க கல்லை கக்கி வைத்துவிட்டு அதன் வெளிச்சத்தில் பாம்பு இரைதேடும் என்பதும் பொய்.
பாம்புகள் ஊர்வன இனத்தை சேர்ந்தவை. உணவு சங்கிலியில் இவை முக்கியமானது. அவை உயிர்வாழ வேண்டும். பாம்புகளை கண்டால் அடிக்காதீர்கள். அதனை கண்டு ஒதுங்கிவிட்டால் தானாக சென்றுவிடும். பாம்புகள் அழிவதை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story