மோட்டார்சைக்கிளில் வந்த விவசாயியை யானை துரத்தியது


மோட்டார்சைக்கிளில் வந்த விவசாயியை யானை துரத்தியது
x
தினத்தந்தி 10 Aug 2018 4:48 AM IST (Updated: 10 Aug 2018 4:48 AM IST)
t-max-icont-min-icon

சத்தியமங்கலம் அருகே மோட்டார்சைக்கிளில் வந்த விவசாயியை யானை துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அவரை அந்த வழியாக காரில் வந்தவர்கள் காப்பாற்றினர்.

பவானிசாகர், 



ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியை சேர்ந்தவர் ராசு (வயது 45). விவசாயி. இவருக்கு சொந்தமான தோட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூர் அருகே அரிகியத்தில் வனப்பகுதியையொட்டி உள்ளது. இந்த தோட்டத்தை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் மோட்டார்சைக்கிளில் வந்தார். தோட்டத்தை பார்த்துவிட்டு மீண்டும் கவுந்தப்பாடி நோக்கி சென்று கொண்டிருந்தார். அரிகியத்தில் இருந்து சிறிது தூரம் அடர்ந்த வனப்பகுதி வழியாக சென்று கொண்டிருந்தபோது ரோட்டோரம் ஒற்றை யானை நின்று கொண்டிருந்ததை கண்டு ராசு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் மோட்டார்சைக்கிளை அங்கேயே நிறுத்தினார். சிறிது நேரத்தில் அந்த யானை அங்கிருந்து வனப்பகுதிக்கு சென்றது. யானை தான் சென்றுவிட்டதே என்று தைரியத்தில், மோட்டார்சைக்கிளை எடுத்துக்கொண்டு புறப்பட்டார்.
ஆனால் அந்த யானை திடீரென்று மோட்டார்சைக்கிளில் வந்த ராசுவை மறித்தது. இதனால் பதறிப்போன ராசு மோட்டார்சைக்கிளை அங்கேயே போட்டுவிட்டு உயிர் பிழைத்தால் போதும் என தப்பி ஓடினார். அவரை பின்தொடர்ந்து யானை துரத்தி சென்றது.

அப்போது அந்த வழியாக சத்தியமங்கலம் ராகவேந்திரா பள்ளி நிறுவனங்களின் தாளாளர் செல்வம், லாரி உரிமையாளரான சிவக்குமார், ஓய்வுபெற்ற நூலகர் சென்னியப்பன் ஆகிய 3 பேர் ஒரு காரில் வந்தனர்.
அப்போது ராசுவை யானை துரத்தி வந்ததை கண்டதும் அவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். ஆனால் காரை ஓட்டி வந்த சிவக்குமார் சாதுரியமாக செயல்பட்டு தன்னுடைய காரின் ஏர்ஹாரனை அழுத்தி பிடித்தார். மேலும் காரை நியூட்ரலில் வைத்துவிட்டு ஆக்சிலேட்டரை அழுத்தினார்.

இந்த சத்தத்தில் ராசுவை யானை துரத்தாமல் நின்றதுடன் அங்கிருந்து வனப்பகுதிக்கு ஓடியது. இதனால் மயிரிழையில் ராசு உயிர் தப்பினார். பின்னர் மோட்டார்சைக்கிளை காரில் தூக்கி போட்டு அங்கிருந்து அவரை கடம்பூர் கொண்டு வந்து விட்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story