தொழில் அதிபரை கடத்தி பணம் பறித்தவர் குண்டர் சட்டத்தில் கைது
ஈரோட்டில் தொழில் அதிபரை கடத்தி பணம் பறித்தவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
ஈரோடு,
ஈரோடு நாடார்மேடு பகுதியை சேர்ந்தவர் சித்தையன் (வயது 50). இவர் ஈஸ்வரன் கோவில் வீதியில் ஜவுளிக்கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவர் நாடார்மேடு பகுதியில் நடந்து சென்றுகொண்டு இருந்தபோது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் அவரை கடத்தி சென்றது. பின்னர், அவரிடம் இருந்த ரூ.1½ லட்சத்தை கொள்ளையடித்துவிட்டு விடுவித்தனர். இதுகுறித்து ஈரோடு சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் சித்தையன் புகார் கொடுத்தார். அவருடைய புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சித்தையனை கடத்தி சென்று பணத்தை பறித்த மர்மநபர்களை வலைவீசி தேடி வந்தனர்.
இந்த கடத்தல் வழக்கில் தொடர்புடைய அறச்சலூர் அடுத்த அனுமன்பள்ளியை சேர்ந்த பத்மநாபன் (43), நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவிரி ஆர்.எஸ். பகுதியை சேர்ந்த முரளிதரன் (48), திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பெத்தநாயக்கன்பட்டியை சேர்ந்த மதன்குமார் (42) ஆகிய 3 பேரை போலீசார் அடுத்தடுத்து கைது செய்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் செந்தில்குமார் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்தநிலையில் கடைசியாக கைதான மதன்குமார் மீது தாராபுரம், பழனி உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழிப்பறி, திருட்டு, ஆள்கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. எனவே அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று கலெக்டர் எஸ்.பிரபாகரிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் மதன்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் எஸ்.பிரபாகர் நேற்று முன்தினம் உத்தரவிட்டார். மதன்குமார் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளதால், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவை சிறைத்துறை அதிகாரிகளிடம் போலீசார் சமர்ப்பித்தனர்.
Related Tags :
Next Story