கடன் வாங்கிக் கொடுத்ததற்கு கமிஷன் கேட்டு தகராறு: ஓட்டல் உரிமையாளர் மீது தாக்குதல் 2 பேர் கைது


கடன் வாங்கிக் கொடுத்ததற்கு கமிஷன் கேட்டு தகராறு: ஓட்டல் உரிமையாளர் மீது தாக்குதல் 2 பேர் கைது
x
தினத்தந்தி 9 Aug 2018 11:44 PM GMT (Updated: 9 Aug 2018 11:44 PM GMT)

கடன் வாங்கிக் கொடுத்ததற்கு கமிஷன் கேட்டதில் ஏற்பட்ட தகராறில் ஓட்டல் உரிமையாளர், அவருடைய மனைவி தாக்கப்பட்டனர். இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருபுவனை,

திருபுவனை பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் குணசேகரன் (வயது 65). இவருடைய மனைவி ராஜலட்சுமி. இவர்கள் அதே பகுதியில் ஓட்டல் நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கொத்தபுரி நத்தத்தில் தனியார் நிதி நிறுவனம் சார்பில் கடன் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

அங்கு குணசேகரன் சென்று கடன் கேட்டார். அந்த முகாமில் அவருக்கு ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் கடன் வழங்க முன்வந்தனர். பின்னர் சரியான ஆவணங்கள் இல்லை என்று அவருக்கு கடன் வழங்க மறுத்ததாக கூறப்படுகிறது. அதன்பின் அவருக்கு கடன் தருகிறோம் என்றும் அதற்கு கமிஷனாக 10 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என்றும் கேட்டனர். அதற்கு குணசேகரன் சம்மதித்து கடன் வாங்கி வந்தார். ஆனால் கமிஷனாக 10 ஆயிரம் ரூபாய் கொடுக்கவில்லை.

இந்தநிலையில் சம்பவத்தன்று லாஸ்பேட்டை அருகே உள்ள நாவற்குளத்தை சேர்ந்த கணேஷ் (வயது 26), மேட்டுப்பாளையம் கார்த்திகேயன் (24) ஆகிய இருவரும் குணசேகரன் ஓட்டலுக்கு சென்றனர். அங்கு கடன் வாங்கிக் கொடுத்ததற்கான கமிஷன் பணத்தை கேட்டனர்.

அப்போது குணசேகரனும், அவருடைய மனைவி ராஜலட்சுமியும் தங்களுக்கு கடன் கொடுத்தவர் வந்தால்தான் பணத்தை தருவோம் என கூறினார்கள். இதனால் அவர்களுக்கிடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கணேஷ் மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் சேர்ந்து குணசேகரனையும், ராஜலட்சுமியையும் தாக்கிவிட்டு சென்றனர்.

இதில் காயம் அடைந்த அவர்கள் இருவரும் புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து புகார் செய்ததன்பேரில் திருபுவனை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி கணேஷ் மற்றும் கார்த்திகேயன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

Next Story