மராத்தா சமுதாயத்தினர் முழு அடைப்பு : மராட்டியம் முழுவதும் வன்முறை


மராத்தா சமுதாயத்தினர் முழு அடைப்பு :  மராட்டியம் முழுவதும் வன்முறை
x
தினத்தந்தி 10 Aug 2018 12:16 AM GMT (Updated: 10 Aug 2018 12:16 AM GMT)

இடஒதுக்கீடு கேட்டு மராத்தா சமுதாயத்தினர் நடத்திய முழுஅடைப்பு போராட்டத்தில் மாநிலம் முழுவதும் பரவலாக வன்முறை ஏற்பட்டது. புனேயில் கலெக்டர் அலுவலம் சூறையாடப்பட்டது.

மும்பை,

மராட்டியத்தில் 30 சதவீத மக்கள் தொகையை கொண்ட மராத்தா சமுதாயத்தினர் தங்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 16 சதவீதம் இட ஒதுக்கீடு கேட்டு போராடி வருகின்றனர்.

கோரிக்கைக்காக அந்த சமுதாயத்தை ேசர்ந்த 6 பேர் தற்கொலை செய்துகொண்டனர். இதன் காரணமாக மாநிலம் முழுவதும் வன்முறை வெடித்தது. நவிமும்பையில் வாலிபர் ஒருவர் கொல்லப்பட்டார். ஏராளமான வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.

இதையடுத்து, முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மராத்தா சமுதாய தலைவர்களை நேரில் சந்தித்து பேசினார். அப்போது, சட்டசபை சிறப்பு கூட்டத்தை கூட்டி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்களிடம் உறுதி அளித்தார்.

மராத்தா இடஒதுக்கீடு பிரச்சினைக்கு தீர்வு காண மாநில அரசு நவம்பர் மாதம் வரை காலஅவகாசம் கோரியுள்ளது. அதற்குள் எதையும் செய்துவிட முடியாது என்று மந்திரி சந்திரகாந்த் பாட்டீல் கூறினார்.

இருப்பினும் ஆகஸ்டு 9-ந்தேதி நவிமும்பையை தவிர்த்து மாநிலம் முழுவதும் அமைதியான முறையில் முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்படும் என மராத்தா சமுதாயத்தினர் ஏற்கனவே அறிவித்து இருந்தனர். இதன்படி நேற்று மராட்டியத்தில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது.

இந்த முழுஅடைப்பின் போது, மராத்தா சமுதாய இளைஞர்கள் வன்முறையில் ஈடுபட கூடாது என அந்த அமைப்பினர் கேட்டு கொண்டிருந்தனர்.

ஆனால் அதையும் மீறி நேற்று முழுஅடைப்பு போராட்டத்தின் போது, பல்வேறு இடங்களிலும் வன்முறை சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டன.

லாத்தூரில் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தவர்கள் வாகனங்கள் மீது கல்வீசி தாக்கினார்கள். இதில் வாகனங்களின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. ஹிங்கோலியில் ஒரு ஜீப் தீ வைத்து எரிக்கப்பட்டது. அவுரங்காபாத்தில் சாலையில் வந்த லாரி ஒன்றை போராட்டக்காரர்கள் வழிமறித்து நிறுத்தி தீ வைத்தனர். இதில் அந்த லாரி கொழுந்து விட்டு எரிந்தது.

இதுபற்றி அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். அப்போது, வன்முறையில் ஈடுபட்டவர்கள் தீயணைப்பு வாகனத்துக்கும் தீ வைத்தனர்.

சாலை மறியல் நடந்த ஜல்னா, அகமதுநகர் உள்ளிட்ட பல இடங்களில் சாலைகளின் குறுக்கே டயர்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.

சில இடங்களில் கல்வீச்சில் ஈடுபட்ட போராட்டக்காரர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டினார்கள்.

அவுரங்காபாத்தில் போராட்டத்தின் போது, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக சிலர் கோஷம் எழுப்பியதால் இருதரப்பினருக்கு இடையே பயங்கர மோதல் உண்டானது.

இதில் ஒருவர் காயம் அடைந்தார். போலீசார் மோதலில் ஈடுபட்டவர்களை விலக்கி பதற்றத்தை தணித்தனர்.

புனேயில் முழுஅடைப்பை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தது. மேலும் போராட்டம் தொடர்பாக வன்முறை பரவுவதை தடுக்க பாராமதி, சிருர், கெட், ஜூன்னார், மாவல், போர், டாவுட் ஆகிய பகுதிகளில் இணையதள சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

பாராமதியில் மராத்தா சமுதாயத்தினர் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் வீட்டு முன் திரண்டு போராட்டம் நடத்தினார்கள்.

இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவாரும் அவர்களுடன் கலந்து கொண்டார்.

புனே கலெக்டர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மராத்தா சமுதாயத்தினர் பலத்த போலீஸ் பாதுகாப்பையும் மீறி கலெக்டர் அலுவலகத்துக்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்டனர். அங்குள்ள ஒரு அறையில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினார்கள்.

கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்சார பல்புகளை உடைத்து வீசினார்கள். இதனால் அங்கு பெரும் பரபரப்பு உண்டானது.

முழுஅடைப்பு காரணமாக மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் காய்கறி சந்தைகள் அடைக்கப்பட்டு இருந்தன. நவிமும்பையில் முழுஅடைப்புக்கு விலக்கு அளிக்கப்பட்டு இருந்த போதிலும் துர்பே காய்கறி சந்தை மூடப்பட்டு இருந்தது.

அங்குள்ள மும்பை- புனே நெடுஞ்சாலை மற்றும் மும்பை- கோவா நெடுஞ்சாலைகளில் பாதுகாப்புக்காக அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

சத்தாராவில் பெட்ரோல் பங்குகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன.

மும்பையில் முழு அடைப்பு காரணமாக பெரிய அளவில் இயல்பு வாழ்க்கை பாதிக்கவில்லை என்றாலும், வெளி மாவட்டங்களுக்கு செல்லும் அரசு பஸ்கள் ஓடவில்லை. இதனால் பயணிகள் பரிதவித்தனர். 

Next Story