மக்கள்தொகை பதிவேடு விவரங்களை கணினியில் பதிவு செய்யும் பணியை 90 நாட்களில் முடிக்க வேண்டும்


மக்கள்தொகை பதிவேடு விவரங்களை கணினியில் பதிவு செய்யும் பணியை 90 நாட்களில் முடிக்க வேண்டும்
x
தினத்தந்தி 10 Aug 2018 9:45 PM GMT (Updated: 10 Aug 2018 7:04 PM GMT)

அரியலூர் மாவட்டத்தில் மக்கள்தொகை பதிவேடுகளில் உள்ள விவரங்களை கணினியில் பதிவு செய்யும் பணிகளை 90 நாட்களில் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் விஜயலட்சுமி உத்தரவிட்டார்.

அரியலூர், 



அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாவட்டத்தில் மக்கள் தொகை பதிவேடு பதிவு செய்தல் தொடர்பான பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது. பயிற்சி வகுப்புக்கு கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கி பேசியதாவது;-

அரியலூர் மாவட்டத்தில் 1,732 மக்கள் தொகை கணக்கெடுப்பு பகுதிகளில் 610 கணக்கெடுப்பாளர்களால்(ஆசிரியர்கள்) 8 லட்சத்து 86 ஆயிரத்து 433 பதிவுகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளன. மேற்படி, பதிவேடுகளில் உள்ள ஆதார் எண்கள், தொலைபேசி எண்கள் மற்றும் குடும்ப அட்டை எண்கள் ஆகிய விவரங்களை கணினியில் பதிவு செய்வதற்கான பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.

கணினியில் பதிவு செய்யும் பணியை மேற்கொள்பவர்கள் தமிழ்நாடு இ-சேவை மையம் மூலம் பணியில் அமர்த்தப்படுகிறார்கள். இந்த பணியை மேற்பார்வை செய்ய அலுவலகங்களில் உள்ள கணினி தெரிந்த வருவாய் ஆய்வாளர்கள் 11 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில் மொத்தம் 49 கணினி பதிவாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேற்பார்வையாளர்கள் ஒவ்வொருவரும் 5 கணினி பதிவாளர்களை மேற்பார்வை செய்து, பணிகள் நடைபெறுவதை கண்காணிக்க வேண்டும்.

பதிவேடுகளை கணினியில் பதிவு செய்த பின்னர் மேற்பார்வையாளரும், கணினி பதிவாளரும் கையெழுத்திட வேண்டும். தாசில்தார் மற்றும் பொறுப்பு அலுவலர்கள் பதிவேடுகளை முறையாக வழங்கி பதிவு செய்த பின்னர், திரும்ப பெற்று பாதுகாப்பாக வைக்க வேண்டும். பணிகள் முடிந்தவுடன் பொறுப்பு அலுவலர்கள் அனைத்தும் முறையாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்ற சான்றினை வழங்க வேண்டும். மேற்படி பதிவு செய்யும் பணிகளை 90 நாட்களில் முடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பயிற்சி வகுப்பில் மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன், சென்னை மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலக உதவி இயக்குனர் சித்ரா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொறுப்பு) பரிதாபானு, தாசில்தார் (தேர்தல் பிரிவு) சந்திரசேகரன் மற்றும் தாசில்தார்கள், நகராட்சி ஆணையர்கள், வருவாய் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

Next Story