மின்வாரிய ஓய்வூதியர்களுக்கு விரிவுபடுத்தப்பட்ட மருத்துவ காப்பீட்டு திட்டம் வேண்டும்


மின்வாரிய ஓய்வூதியர்களுக்கு விரிவுபடுத்தப்பட்ட மருத்துவ காப்பீட்டு திட்டம் வேண்டும்
x
தினத்தந்தி 10 Aug 2018 9:45 PM GMT (Updated: 10 Aug 2018 7:24 PM GMT)

மின்வாரிய ஓய்வூதியர்களுக்கு விரிவுபடுத்தப்பட்ட மருத்துவ காப்பீட்டு திட்டம் வேண்டும் என்று பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கரூர், 


கரூர் மாவட்ட மின்வாரிய ஓய்வூதியர் சங்க பொதுக்குழு கூட்டம் கரூரில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் ஜவகர் தலைமை தாங்கினார். இணை செயலாளர் கோபாலன் வரவேற்று பேசினார். செயலாளர் ராஜகோபால் ஆண்டறிக்கை வாசித்தார். தமிழ்நாடு மின்வாரிய ஓய்வூதியர் சங்கங்களின் சம்மேளன தலைவர் ஸ்ரீதரன், பொது செயலாளர் சேகநாதன், பொருளாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். கூட்டத்தில் தமிழ்நாடு மின்வாரியத்தின் வைரவிழா ஆண்டினை முன்னிட்டு வாரிய பணியாளர்களுக்கும், அலுவலர்களுக்கும் 3 சதவீத கூடுதல் ஊதியம் வழங்கப்பட்டதைப்போல் மின்வாரிய ஓய்வூதியர்களுக்கும், குடும்ப ஓய்வூதியர்களுக்கும் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்களின் பணிப்பதிவேடுகளை சி.டி. வடிவில் தயாரித்து ஏற்கனவே பணி ஓய்வு பெற்றவர்களுக்கும், இனி ஓய்வு பெறும் பணியாளர்களுக்கும் பணி ஓய்வு நாளிலேயே வழங்க வேண்டும். 1988-1995 வரை ஓய்வு பெற்றவர்களின் ஊதியம் திருத்தி அமைக்கப்பட்டு கூடுதல் ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது.

அதில் கரூர் சங்க மூத்த உறுப்பினர் எட்டிக்கண் விண்ணப்பம் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இது குறித்து திருச்சி மன்னார்புரம் அலுவலகத்தில் விசாரித்தபோது அவரது பணிப்பதிவேடு எங்கு தேடியும் கிடைக்கவில்லை என தெரிவித்தனர். இது தொடர்பாக வாரிய தலைமை அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி தீர்வு காண வேண்டும். தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்களுக்கு விரிவுபடுத்தப்பட்ட மருத்துவ காப்பீட்டு திட்டம் அறிமுகப்படுத்தியதை போல், மின்வாரிய ஓய்வூதியர்களுக்கும்- குடும்ப ஓய்வூதியர்களுக்கும் பெற்றுத்தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் கவுரவ தலைவர் சிவராமன், துணை தலைவர்கள் பெரியண்ணன், ரத்தினாசலம் உள்பட மின்வாரிய ஓய்வூதியர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் துணை செயலாளர் காளியப்பன் நன்றி கூறினார். முன்னதாக கூட்டம் தொடங்கியதும், முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி மறைவையொட்டி மின்வாரிய ஓய்வூதியர்கள் அஞ்சலி செலுத்தினர்.


Next Story