ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1.15 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு


ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1.15 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு
x
தினத்தந்தி 10 Aug 2018 10:45 PM GMT (Updated: 10 Aug 2018 7:45 PM GMT)

ஒகேனக்கல்லுக்கு நேற்று மாலை வினாடிக்கு 1 லட்சத்து 15 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணை மீண்டும் நிரம்புகிறது.

மேட்டூர்,

கடந்த மாதம் பெய்த பருவமழையின் போது ஒகேனக்கலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த நிலையில், கர்நாடகா மற்றும் கேரளாவில் கடந்த இருவாரங்களுக்கு பிறகு, மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகாவில் ஏற்கனவே நிரம்பிய, கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் இந்த 2 அணைகளில் இருந்தும் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் வினாடிக்கு 1 லட்சத்து 43 ஆயிரத்து 223 கனஅடி தண்ணீர் நேற்று திறந்து விடப்பட்டுள்ளது.

கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவை கடந்து தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்தது. நேற்று முன்தினம் வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடி வந்து கொண்டிருந்த நீர்வரத்து இரவில் 18 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. நேற்று காலை 9 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 65 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து மளமளவென்று உயர்ந்தது.

தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து மாலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 1 லட்சத்து 15 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதனால் ஒகேனக்கல்லில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. காவிரி ஆற்றில் இருபுறமும் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. மேலும் ஒகேனக்கல் ஐந்தருவி, மெயின் அருவி, சினிபால்சில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் தண்ணீர் சீறிப்பாய்ந்தபடி சென்றது.

காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் அருவி மற்றும் காவிரி கரையோர பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் நேற்று முன்தினம் மாலையுடன் பரிசல் சவாரியும் நிறுத்தப்பட்டது. ஒகேனக்கல்லுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துக்கொண்டே இருப்பதால் காவிரி கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு தண்டோரா மூலம் எச்சரிக்கை விடப்பட்டது.

பொதுமக்கள் காவிரி ஆற்றில் இறங்க வேண்டாம் என்று போலீசார் ஒலிப்பெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் காவிரி கரையோரம் போலீசார், தீயணைப்பு படையினர், மீட்பு படையினர் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர். நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து நேற்று முன்தினம் திறந்து விடப்பட்ட தண்ணீர், ஒகேனக்கல்லை கடந்து நேற்று அதிகாலை சேலம் மாவட்டம், மேட்டூர் அணைக்கு வந்தது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக நேற்று முன்தினம் வினாடிக்கு 8 ஆயிரத்து 751 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை வினாடிக்கு 16 ஆயிரத்து 969 கனஅடியாக அதிகரித்தது. இரவு 9 மணியளவில் வினாடிக்கு 80 ஆயிரம் கனஅடியாக இந்த நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நள்ளிரவில் வினாடிக்கு 1 லட்சம் கனஅடிக்கும் மேல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அணைக்கு வரும் நீர்வரத்தை பொறுத்து அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவை அவ்வப்போது பொதுப்பணித்துறை அதிகாரிகள் அதிகரித்து வருகிறார்கள்.

நேற்று மதியம் அணையில் இருந்து வினாடிக்கு 35 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டு வந்த நிலையில், இரவு 9 மணியளவில் வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. இதில் அணை சுரங்க மின்நிலையம் வழியாக, 22 ஆயிரத்து 500 கனஅடி நீரும், உபரிநீர் போக்கியான 16 கண் பாலம் வழியாக வினாடிக்கு 26 ஆயிரத்து 700 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கால்வாய் பாசனத்துக்காக வினாடிக்கு 800 கனஅடி நீரும் திறக்கப்படுகிறது.

அணையின் நீர்மட்டம் நேற்று 116.85 அடியாக உள்ளது. இந்த நீர்மட்டம் தொடர் நீர்வரத்து காரணமாக உயர்ந்து மீண்டும் அணை நிரம்பும் வாய்ப்பு உள்ளது. தண்ணீர் திறப்பு அதிகரிப்பு எதிரொலியாக, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி ஆகிய 5 மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. காவிரி கரையோர கிராமங்களில் வருவாய், பொதுப்பணி மற்றும் போலீஸ் துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேட்டூர் அணை கடந்த மாதம் தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியதை தொடர்ந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டது. அதைத்தொடர்ந்து பூலாம்பட்டி- நெரிஞ்சிப்பேட்டை இடையே நடைபெற்ற விசைப்படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னர் தண்ணீர் வரத்து குறைந்ததால் காவிரி ஆற்றில் கடந்த 4-ந் தேதி மீண்டும் விசைப்படகு போக்குவரத்து தொடங்கியது. தற்போது மீண்டும் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால், பூலாம்பட்டியில் விசைப்படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

Next Story