கும்மிடிப்பூண்டியில் நூதன முறையில் செல்போன்கள் திருட்டு


கும்மிடிப்பூண்டியில் நூதன முறையில் செல்போன்கள் திருட்டு
x
தினத்தந்தி 11 Aug 2018 3:45 AM IST (Updated: 11 Aug 2018 1:41 AM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டியில் நூதன முறையில் செல்போன்கள் திருடப்பட்டுள்ளது.

கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டி பஜாரையொட்டி உள்ள பிரித்வி நகரை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 41). இவர் கும்மிடிப்பூண்டி பஜாரில் பஸ் நிலையம் அருகே செல்போன் கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் ஆனந்தராஜ் (31) ஊழியராக வேலை செய்து வருகிறார். நேற்று காலை, செல்போன் கடையில் உரிமையாளர் நாகராஜ் இல்லை. அப்போது கடைக்கு வாலிபர் ஒருவர் வந்தார்.

அவர், நான் ஒரு நல்ல செல்போன் வாங்க வேண்டும். கடையில் உரிமையாளரும் இல்லை. எனக்கு அவரை நன்றாக தெரியும். எனது செல்போனில் சார்ஜ் இல்லை எனவே உனது போனில் இருந்து கடை உரிமையாளருக்கு ஒரு போன் பண்ணு என கடை ஊழியர் ஆனந்தராஜிடம் கூறினார்.

இதனையடுத்து ஆனந்தராஜ், தனது செல்போனில் இருந்து கடை உரிமையாளர் நாகராஜுக்கு போன் செய்தார். அவரிடம் செல்போனில் பேசிய மேற்கண்ட வாலிபர், உங்களை எனக்கு நன்றாக தெரியும். நீங்க இருந்தா போன் விலையை குறைத்து கொடுப்பீங்க. எல்லா கடையையும் விட்டு விட்டு உங்க கடைக்குதான் நான் செல்போன் வாங்க வந்திருக்கேன் என கூறி உள்ளார்.

இதனை கேட்ட நாகராஜ், நீங்க யார் என்று எனக்கு தெரியவில்லை. இருந்தாலும் கடை ஊழியரிடம் போனை கொடுக்கும்படி கூறினார். போனை பெற்றுக் கொண்ட ஆனந்தராஜிடம், நம்ம கடையை தேடி வந்திருப்பதால் விலையை கொஞ்சம் பார்த்து குறைத்து கொடு என்று கடை உரிமையாளர் நாகராஜ் கூறியுள்ளார்.

இதன் பின்னர், கடைக்கு வந்த அந்த வாலிபர், தனது செல்போனை சார்ஜ் போடும்படி கடை ஊழியர் ஆனந்தராஜிடம் கொடுத்தார். மேற்கண்ட வாலிபரின் செல்போனை வாங்கி பத்திரமாக ஆனந்தராஜ் கடையில் சார்ஜ் போட்டார். இந்த நிலையில், கடையில் தலா ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள 3 வெவ்வேறு செல்போன்களை அந்த வாலிபர் எடுத்தார். மாற்றுதிறனாளியான தனது தந்தை வெளியே உள்ள காரில் அமர்ந்து இருப்பதாகவும், அவரிடம் 3 செல்போன்களையும் காண்பித்து விட்டு வந்து, அதில் இருந்து ஒரு செல்போனை எடுத்து கொள்வதாக அவர் கூறினார்.

கடை உரிமையாளரிடமும் ஏற்கனவே பேசி உள்ளார். அவரது செல்போனையும் இங்கு சார்ஜ் போட கொடுத்து உள்ளார். எனவே அந்த வாலிபர் மீது மிகுந்த நம்பிக்கை ஏற்பட்ட நிலையில் கடை ஊழியர் ஆனந்தராஜ், மேற்கண்ட 3 புதிய போன்களையும் அவரிடம் கொடுத்து அனுப்பினார். கடையில் இருந்து சீல் பிரிக்காத அட்டை பெட்டியுடன் 3 செல்போன்களையும் எடுத்து சென்ற வாலிபர், மீண்டும் கடைக்கு திரும்பி வரவில்லை.

இந்த நிலையில் கடைக்கு வந்த உரிமையாளர் நாகராஜிடம் நடந்த சம்பவத்தை ஊழியர் ஆனந்தராஜ் கூறினார். அந்த வாலிபர் சார்ஜ் போட கொடுத்த போனை எடுத்து பார்த்தபோது அதில் சிம் கார்டு இல்லை. மேலும் செல்போன் பதிவில் எந்த ஒரு தொலைபேசி எண்ணோ, பிற தகவல்களோ எதுவும் இல்லை. எல்லாவற்றையும் அழித்து விட்டு போனை சார்ஜ் போட கொடுத்த அந்த வாலிபர் நூதன முறையில் 3 புதிய செல்போன்களை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது.

இது குறித்து கும்மிடிப்பூண்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போனில் அழிக்கப்பட்ட பதிவுகளை அதற்குரிய சாப்ட்வேர் போட்டு பார்க்கும் போது கடைக்கு வந்த மேற்கண்ட வாலிபரின் புகைப்படம் அதில் இருப்பது தெரியவந்தது. அத்துடன் சிலரின் புகைப்படங்களும் இருந்தன. இதனையடுத்து யாரிடமோ செல்போனை திருடி அதை சிறிது காலம் பயன்படுத்திய பின்னர், அதில் இருந்த பதிவுகளை அழித்து விட்டு, தனது நூதன செல்போன் திருட்டுக்கு மேற்கண்ட செல்போனை அந்த வாலிபர் பயன்படுத்தி இருப்பது தெரியவந்துள்ளது. திருட்டு போன செல்போன்களின் மொத்த மதிப்பு ரூ.45 ஆயிரம் ஆகும்.

பட்டப்பகலில் செல்போன் கடையில் நடந்த இந்த நூதன திருட்டு குறித்து இன்ஸ்பெக்டர் ஜெயகுமார் தலைமையில் கும்மிடிப்பூண்டி சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன் வழக்குப்பதிவு செய்து வாலிபரின் புகைப்படத்தை கொண்டு மேலும் விசாரணை நடத்தி வருகின்றார்.

Next Story