மாநகராட்சி நிர்வாகத்தின் செயல்பாட்டால் திருப்பூர் மாநகரில் வளர்ச்சிப்பணிகள் நடைபெறுவதில் சுணக்கம்


மாநகராட்சி நிர்வாகத்தின் செயல்பாட்டால் திருப்பூர் மாநகரில் வளர்ச்சிப்பணிகள் நடைபெறுவதில் சுணக்கம்
x
தினத்தந்தி 10 Aug 2018 11:15 PM GMT (Updated: 10 Aug 2018 9:40 PM GMT)

திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்தின் செயல்பாட்டால் வளர்ச்சிப்பணிகள் நடைபெறுவதில் சுணக்க நிலை நீடிக்கிறது.

திருப்பூர்,

பின்னலாடை நகரான திருப்பூர் மாநகராட்சி 60 வார்டுகளை கொண்டது. இங்கு சுமார் 10 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். பனியன் தொழில் மூலமாக வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து தொழில் துறையினர் திருப்பூர் வந்து செல்கிறார்கள். ஆனால் மாநகரில் சுகாதாரம் என்பது சீர்கெட்டு காணப்படுகிறது. வீதிகளில் ஆங்காங்கே குப்பை குவியலாகவே காட்சியளிக்கிறது. குப்பை தொட்டிகள் வைத்திருந்தாலும் அந்த தொட்டிகள் நிறைந்து குப்பைகள் சாலையோரம் சிதறிக்கிடக்கிறது. தற்போது பலத்த காற்றுவீசும் காலமாக இருப்பதால் குப்பைகள் ரோட்டில் பறந்து வீதியில் நடந்து செல்பவர்களையும், வாகன ஓட்டிகளையும் சிரமத்துக்குள்ளாகி வருகிறது. திருப்பூர் சின்னான் நகர் பகுதியில் மலைபோல் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் மூக்கை பொத்திக்கொண்டு செல்ல வேண்டி உள்ளது. அதுபோல் சந்திராபுரம் பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் பாலீத்தீன் பைகள், பிளாஸ்டிக் பொருட்கள் கிடப்பதால் சாக்கடை நீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

அதுபோல் கழிவுநீர் கால்வாய்களில் சாக்கடை நீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. பல வார்டுகளில் தேங்கும் சாக்கடை நீரால் சுகாதாரம் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் சொல்லொண்ணா சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். குப்பை அள்ளும் பணி தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டாலும் மாநகராட்சி சுகாதாரப்பிரிவு அதிகாரிகள் அவற்றை மேற்பார்வையிடுகிறார்கள். ஆனால் தற்போது குப்பை அள்ளுவது, சாக்கடை கால்வாய்களை சுத்தம் செய்யும் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. அதுபோல் குப்பைகளை, கைவிடப்பட்ட பாறைக்குழியில் தான் கொட்டி வருகிறார்கள்.

சில பகுதிகளில் உள்ள பாறைக்குழியில் குப்பை கொட்டுவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் குப்பையை எங்கு கொண்டு சென்று கொட்டுவது என்று தெரியாமல் மாநகராட்சி அதிகாரிகள் தவிக்கிறார்கள். இதனால் குப்பைகளை முறையாக அகற்ற முடியாத நிலை தொடர்கிறது. அதுபோல் மாநகராட்சி பகுதியில் சாக்கடை கால்வாய் கட்டும் பணி உள்ளிட்ட கட்டுமான பணிகள், வளர்ச்சிப்பணிகள் எதுவும் செய்யப்படாமல் முடங்கிக்கிடக்கிறது.

குடிநீர் வினியோக பணிகளில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. இங்கிருந்த மாநகராட்சி ஆணையாளர் பதவி உயர்வு பெற்று சென்னைக்கு மாறுதலாகி சென்று விட்டார். தற்போது மாநகர பொறியாளர், ஆணையாளர் பொறுப்பை கவனித்து வருகிறார். அதுபோல் செயற்பொறியாளர் பணியிடம் ஒன்று காலியாக இருப்பதால் அந்த பணியிடத்தையும் மற்றொரு செயற்பொறியாளர் சேர்த்து கவனித்து வருகிறார். இதனால் வளர்ச்சிப்பணிகளுக்கான ஆவணங்கள் கையெழுத்தாவதில் கடுமையான சுணக்க நிலை ஏற்பட்டு இருக்கிறது. மாத கணக்கில் ஆவணங்கள் தேங்கி கிடப்பதாக அங்கு பணியாற்றும் ஊழியர்களே புலம்பி வருகிறார்கள்.

மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் இல்லாததால் அதிகாரிகள் மட்டுமே மாநகராட்சி நிர்வாகத்தை கவனித்து வருகிறார்கள். மக்கள் பிரதிநிதிகள் இருந்தால் என்னென்ன வளர்ச்சிப்பணிகள் செய்தார்கள்? என்பதை கண்காணிப்பார்கள். மேலும் ஒவ்வொரு பகுதிகளில் உள்ள மக்களின் அடிப்படை தேவைகள் குறித்தும் மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரியப்படுத்தி அவற்றை தீர்வு காண்பதற்கு ஒத்துழைப்பார்கள். ஆனால் இப்போது மக்கள் பிரதிநிதி இல்லாததால் அதிகாரிகள் தன்னிச்சை போக்குடன் செயல்பட்டு வருகிறார்கள்.

குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி, சாக்கடை கால்வாய் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து பொதுமக்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் வந்து முறையிட்டாலும் கூட அதற்கு எவ்வித தீர்வும் எட்டப்படாமல் உள்ளது. இதன்காரணமாக மக்களும் ஒருவித விரக்தி மனப்பான்மையுடன் காணப்படுகிறார்கள். அதுபோல் மாநகராட்சியில் நடக்கும் பணிகளுக்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்வதிலும் மந்தநிலை ஏற்பட்டுள்ளது. நடந்து முடிந்த பணிகளுக்கும், நடந்து வரும் பணிகளுக்கும் தேவையான நிதியை ஒப்பந்ததாரர்களுக்கு வழங்காமல் இழுத்தடிக்கும் நிலை உள்ளது. இதனால் மாநகர பகுதியில் வளர்ச்சிப்பணிகள் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் திருப்பூர் மாநகராட்சி இடம் பெற்று இருக்கிறது. அந்த திட்டத்தின் கீழ் பல கோடிகளில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு அதற்கான கருத்துருக்களை தயார் செய்து மத்திய, மாநில அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஆனால் அதுபோன்ற கருத்துருக்களை தயார் செய்து அனுப்பி வைப்பதிலும் கூட தாமதம் தொடர்வதாக தெரிவித்தனர். உரிய நேரத்தில் கருத்துருக்களை அனுப்பி வைக்காவிட்டால் அதற்கான நிதி ஒதுக்கீட்டை பெறுவதில் சிரமம் ஏற்படும். மாநகராட்சியின் செயல்பாடுகளால் இதுபோன்ற பெரிய, பெரிய திட்டங்களை நிறைவேற்றுவதிலும் பல்வேறு சிக்கல் தொடர்கிறது.

மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கிடைக்காமல் இருப்பது ஒருபுறம் இருக்க, மாநகராட்சி நிர்வாகமோ முற்றிலும் முடங்கி போய் இருக்கும் சூழ்நிலையில் சொத்து வரி உள்ளிட்ட வரியினங்களை உயர்த்தி அறிவித்து விட்டார்கள். இது மக்களுக்கு பேரிடியாக அமைந்து விட்டது. பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்களை நடத்தினாலும் அதுபற்றி கண்டுகொள்ளாத நிலையிலேயே திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் உள்ளது. டாலர் சிட்டி என்ற பெருமை பெற்ற திருப்பூர், மாநகராட்சி நிர்வாகத்தின் செயல்பாடுகளால் வளர்ச்சிப்பணிகள் எதுவும் நடைபெறாமல் மந்தமான நிலையில் காணப்படுவதாக சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். 

Next Story