மின்இணைப்புக்கு லஞ்சம் வாங்கிய உதவி செயற்பொறியாளருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை, கோவை கோர்ட்டு தீர்ப்பு


மின்இணைப்புக்கு லஞ்சம் வாங்கிய உதவி செயற்பொறியாளருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை, கோவை கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 10 Aug 2018 10:30 PM GMT (Updated: 10 Aug 2018 9:49 PM GMT)

கோவையில் மின் இணைப்புக்கு லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி செயற்பொறியாளருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பளித்தது.

கோவை,

கோவை ஆவாரம்பாளையம் பாலசுந்தரம் ரோட்டை சேர்ந்தவர் பாலதண்டபாணி. இவருடைய மனைவி வேலுமணி (வயது 65). இவர் அந்த பகுதியில் வீடு கட்டினார். இதற்காக மின் இணைப்பு கேட்டு ஆவாரம்பாளையத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.

அப்போது அங்கு உதவி செயற்பொறியாளராக பணியாற்றிய மணிவேல், உடனடியாக மின் இணைப்பு கொடுக்க வேண்டும் என்றால் ரூ.15 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று வேலுமணியிடம் கேட்டார். அதற்கு அவர் அவ்வளவு பணம் என்னிடம் இல்லை. ரூ.5 ஆயிரம் தான் இருக்கிறது என்று கூறி ரூ.5 ஆயிரத்தை அவரிடம் கொடுத்தார்.

ஆனாலும் அவருடைய வீட்டிற்கு மின் இணைப்பு கொடுக்கவில்லை. இது பற்றி அவர், மின்வாரிய அலுவலகத்துக்கு சென்று மணிவேலிடம் கேட்டார். அதற்கு அவர் மேலும் ரூ.10 ஆயிரம் கொடுத்தால்தான் மின் இணைப்பு கொடுப்போம் என்று கூறி உள்ளார். இதனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத வேலுமணி இது குறித்து தனது கணவர் பாலதண்டபாணியிடம் தெரிவித்தார். அவர் உடனடியாக கோவை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.

இதையடுத்து போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அதை உதவி செயற்பொறியாளர் மணிவேலிடம் கொடுக்குமாறு கூறியுள்ளனர். அதன்படி கடந்த 3-6-2015 அன்று பாலதண்ட பாணி ஆவாரம்பாளையம் மின்வாரிய அலுவலகத்துக்கு சென்று மணிவேலை சந்தித்து ரூ.10 ஆயிரத்தை கொடுத்தார். அதை அவர் வாங்கியதும், அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் மணிவேலை கையும் களவுமாக பிடித்து, ஊழல் தடுப்பு சட்டத்தில் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இது குறித்து கோவையில் உள்ள ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இதற்கிடையே, தனது மீது தொடரப் பட்ட ஊழல் வழக்கை விரைவில் முடிக்கக்கோரி மணிவேல் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அவருடைய மனுவை 6 மாதத்துக்குள் விசாரித்து முடிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இதையடுத்து இந்த வழக்கு விசாரணை தீவிரமாக நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் மணிவேலுக்கு 2 பிரிவுகளுக்கும் தலா 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜான் மினோ தீர்ப்பளித்தார்.

இந்த தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் அவர் தனது உத்தரவில் குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து போலீசார் மணிவேலை பாதுகாப்புடன் அழைத்துச்சென்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் ஆஜராகி வாதாடிய அரசு வக்கீல் சிவக்குமார் கூறும்போது, ‘இந்த வழக்கில் உதவி செயற்பொறியாளர் மணிவேலுக்கு 2 பிரிவுகளில் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. தண்டனையை அவர் ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்ற நீதிபதி தீர்ப்பில் கூறி இருப் பதால், மணிவேல் 4 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்தால் போதும்’ என்றார். 

Next Story