முன் அறிவிப்பு இல்லாமல் அடிக்கடி மூடப்படும் காந்திபுரம் மேம்பாலம், வாகன ஓட்டிகள் கடும் அவதி


முன் அறிவிப்பு இல்லாமல் அடிக்கடி மூடப்படும் காந்திபுரம் மேம்பாலம், வாகன ஓட்டிகள் கடும் அவதி
x
தினத்தந்தி 10 Aug 2018 10:45 PM GMT (Updated: 10 Aug 2018 9:49 PM GMT)

கோவையில் முன் அறிவிப்பு இல்லாமல் காந்திபுரம் மேம்பாலம் அடிக்கடி மூடப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகிறார்கள்.

கோவை,

கோவை காந்திபுரம் பகுதியில் ஏற்பட்டு வந்த போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், டாக்டர் நஞ்சப்பா ரோட்டில் உள்ள பார்க் கேட் சிக்னலில் இருந்து ஆம்னி பஸ் நிலையம் வரை 1.75 கி.மீ. தூரத்துக்கு மேம்பாலம் கட்டப்பட்டு உள்ளது. இந்த மேம்பாலத்தில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

அதுபோன்று காந்திபுரம் 100 அடி ரோட்டில் இருந்து சின்னசாமி ரோட்டில் 2-ம் கட்ட மேம்பாலம் கட்டும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இதற்காக தூண்கள் அமைத்து அவற்றில் கான்கிரீட் போடப்பட்டு வருகிறது. அத்துடன் ஏற்கனவே கட்டப்பட்டு உள்ள மேம்பாலத்தில், காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் உள்ள ஜி.பி. சிக்னலின் மேல் பகுதியில் 2-வது பாலம் அமைப்பதற்கான பணிகளும் தொடங்கப்பட்டு உள்ளது.

இதற்காக முதலாவது பாலத்தில் இருந்து கம்பிகள் போடப்பட்டு இருந்ததால், அந்த வழியாக கனரக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இலகுரக வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டு இருந்தது. அத்துடன் கனரக வாகனங்கள் செல்லாமல் இருப்பதற்காக நஞ்சப்பா ரோடு மற்றும் ஆம்னி பஸ்நிலையம் அருகே மேம்பாலத்தில் வாகனங்கள் ஏறும் இடத்தில் உயரம் குறைவாக கொண்ட தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டன.

இதன் காரணமாக இரவு நேரத்தில் மேம்பாலத்தில் வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. தற்போது முதலாவது மேம்பாலத்தின் மேல் பகுதியில் 2-வது பாலம் அமைக்கும் பணிகள் முடிந்து விட்டன. அத்துடன் பாலம் அமைப்பதற்காக போடப்பட்ட தடுப்பு கம்பிகள் அனைத்தும் அகற்றப்பட்டு விட்டன. இருந்தபோதிலும் இரவு நேரத்தில் பாலம் மூடப்படுவதால் காந்திபுரம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:- காந்திபுரம் பகுதியில் ஏற்பட்டு வரும் வாகன நெரிசலை கட்டுப்படுத்தவே காந்திபுரம் மேம்பாலம் அமைக்கப்பட்டது. இந்த பாலம் திறந்த பின்னர், கணபதி, சரவணம்பட்டி மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளுக்கு செல்பவர்கள் மேம்பாலத்தை பயன்படுத்தி வந்தனர். அத்துடன் 100 அடி ரோடு, கிராஸ்கட் ரோடு பகுதிக்கு செல்பவர்கள் பாலத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள ரோடு வழியாக சென்றனர். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் குறைவாகத்தான் இருந்தது.

இந்த நிலையில், முதலாவது பாலத்தின் மேல் பகுதியில் 2-வது பாலம் குறுக்கிடுவதால், அதற்கான பணி நடந்தபோது கனரக வாகனங்களை விடவில்லை. இதற்காக பாலத்தில் ஏறும் இடத்தில் தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டு, அதில் பாதுகாவலர்களும் நியமிக்கப்பட்டனர். ஆனால் இரவு நேரத்தில் அங்கு பாதுகாவலர்களை நியமிக்காமல் பாலத்தின் மீது வாகனங்கள் செல்ல முடியாமல் அங்கு தடுப்பு வைத்து மூடி விடுகிறார்கள்.

சில நாட்கள் இரவு 9 மணிக்கு மேல் அடைத்தனர். தற்போது இரவு 7 மணிக்கு மேல் அடைத்து விடுகிறார்கள். அத்துடன் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பகலில் கூட இந்த மேம்பாலம் எவ்வித முன் அறிவிப்பும் இல்லாமல் திடீரென்று மூடப்படுகிறது. இதன் காரணமாக வாகனங்கள் அனைத்தும் மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் செல்வதால், அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

குறிப்பாக இரவு 8 மணியில் இருந்து 9.30 மணி வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகிறார்கள். பலகோடி ரூபாய் செலவில் மேம்பாலம் அமைக்கப்பட்டும் அதை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே காந்திபுரம் மேம்பாலத்தில் இரவு நேரத்திலும் வாகனங்கள் செல்ல அனுமதி அளிப்பதுடன், அங்கு கனரக வாகனங்கள் செல்வதை தடுக்க இரவிலும் உரிய பாதுகாவலர்களை நியமிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

காந்திபுரத்தில் கட்டப்பட்டு உள்ள முதலாவது மேம்பாலத்தின் மேல் பகுதியில் 17 அடி உயரத்தில் 2-வது மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. பாலத்தின் மேல் பகுதியில் 2-வது மேம்பாலம் கட்ட அமைக்கப்பட்ட தடுப்பு கம்பிகள் இன்னும் முழுமையாக அகற்றப்படவில்லை. இந்த நிலையில் இரவு நேரத்தில் பாலத்தை திறந்து விட்டால், கனரக வாகனங்கள் செல்லும்போது விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.

எனவேதான் அங்கு இரவு நேரத்தில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு மேம்பாலம் மூடப்படுகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் தடுப்பு கம்பிகள் அனைத்தும் அகற்றப்பட்டு விடும். எனவே விரைவில் காந்திபுரம் மேம்பாலத்தில் இரவு நேரத்திலும் வாகனங்கள் செல்ல அனுமதி அளிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

Next Story