சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி நீலகிரியில் யானைகள் வழித்தடத்தில் உள்ள 27 தனியார் விடுதிகளை காலி செய்ய நோட்டீசு


சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி நீலகிரியில் யானைகள் வழித்தடத்தில் உள்ள 27 தனியார் விடுதிகளை காலி செய்ய நோட்டீசு
x
தினத்தந்தி 10 Aug 2018 11:30 PM GMT (Updated: 10 Aug 2018 10:02 PM GMT)

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடத்தில் உள்ள 27 தனியார் விடுதிகளை காலி செய்ய நோட்டீசு வழங்கப்பட்டது.

மசினகுடி,

நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் பொக்காபுரம், மாவனல்லா, வாழைத்தோட்டம், மாயார், செம்மநத்தம், பூதநத்தம், சிறியூர், ஆனைக்கட்டி, சிங்காரா உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். அவர்கள், கால்நடை வளர்ப்பு, விவசாயம் மற்றும் சுற்றுலா தொழில்களை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் மசினகுடி, பொக்காபுரம், வாழைத்தோட்டம், சிங்காரா பகுதிகளில் யானைகள் வழித்தடத்தின் குறுக்கே தனியார் தங்கும் விடுதிகள், ஓட்டல்கள் கட்டப்பட்டு உள்ளது. அதனால் வழித்தடம் துண்டிக்கப்பட்டு யானைகள் இடம்பெயர்ந்து செல்ல முடியாமல் உள்ளது. எனவே யானை வழித்தடத்தில் உள்ள கட்டிடங்களை அகற்ற வேண்டும் என்று கோரி சென்னையை சேர்ந்த யானை ராஜேந்திரன் என்பவர் கடந்த 2008-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இது குறித்து விசாரித்த சென்னை ஐகோர்ட்டு கடந்த 2011-ம் ஆண்டு யானைகள் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறும், வழித்தடத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதிகள் மற்றும் குடியிருப்புகளை காலி செய்து மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைக்கவும் உத்தரவிட்டு, அந்த பகுதிகளில் புதிதாக கட்டிடங்கள் கட்டவும் தடை விதித்தது. ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து 50-க்கும் மேற்பட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். அந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் மதன் பி.லோகுர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.

சுப்ரீம் கோர்ட்டில் நேற்று முன்தினம் அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மாவட்ட நிர்வாகம் அறிக்கையை பார்த்த நீதிபதிகள் 39 தனியார் விடுதிகளில், 27 விடுதிகளுக்கு 48 மணி நேரத்துக்குள் சீல் வைக்க வேண்டும் என்றும், மீதமுள்ள 12 விடுதிகள் 48 மணி நேரத்தில் ஆவணங்களை மாவட்ட கலெக்டரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அவை முறையான ஆவணங்களை வைத்து செயல்படும் பட்சத்தில் தொடர்ந்து இயங்க அனுமதிக்கலாம் என்றும், ஆவணங்கள் சரியாக இல்லாவிட்டால் அவற்றுக்கும் சீல் வைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

மேலும் 39 தனியார் தங்கும் விடுதிகளை தவிர வழித்தடத்தில் உள்ள மற்ற குடியிருப்புகளில் வசித்து வருபவர்கள் 2 மாத காலத்துக்குள் குடியிருப்புகள் குறித்த விவரங்களை மாவட்ட நிர்வாகத்திடம் சமர்ப்பித்து சரிபார்த்து கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை யில் ஊட்டி பிங்கர்போஸ்ட்டில் உள்ள நீலகிரி மாவட்ட கலெக்டர் கூடுதல் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இதில் மசினகுடி, கடநாடு, உல்லத்தி ஆகிய 3 ஊராட்சிகள் மற்றும் சோலூர் பேரூராட்சி பகுதிகளில் உள்ள 27 தனியார் விடுதிகளுக்கு நோட்டீசு வழங்க ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், தாசில்தார் தினேஷ், கூடலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன் குமாரமங்கலம் உள்ளிட்டோர் அடங்கிய 4 குழுக்கள் அமைக்கப்பட்டன. அவர்கள், ஊராட்சித்துறை அதிகாரிகள் தலைமையில் போலீஸ் பாதுகாப்புடன் நேற்று மசினகுடி, பொக்காபுரம் பகுதியில் உள்ள சம்பந்தப்பட்ட 27 தனியார் விடுதிகளுக்கு நேரில் சென்று நோட்டீசு வழங்கினார்கள். ஆள் இல்லாத விடுதிகளின் கதவுகளில் நோட்டீசு ஒட்டப் பட்டது.

அந்த நோட்டீசில், அனுமதி பெறாமல் கட்டப்பட்ட கட்டிடம் என்றும், எனவே அந்த கட்டிட உபயோகத்தை உடனடியாக நிறுத்துமாறும், கட்டிடம் மற்றும் கட்டிட வளாகத்தை காலி செய்யுமாறும், 48 மணி நேரத்துக்குள் கட்டிடத்தை காலி செய்யாவிட்டால் தமிழ்நாடு நகர ஊரமைப்பு சட்டத்தின்படி சம்மந்தப்பட்ட அதிகாரிகளால் சீல் வைக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி மாவட்ட நிர்வாகத்தால் நோட்டீசு ஒட்டப்பட்ட 27 விடுதிகளின் பெயர் விவரம் வருமாறு:-

பேர்மவுண்டன், இன் தி வைல்டு, புளுவேலி, கிளன்டன் பேரடைஸ், அவலாஞ்சி ரிசாட், வெஸ்லி வுட் எஸ்டேட், பெல் மவுண்ட் ரிட்ரீட், சபாரி லேண்ட், மவுண்ட் வியூ பார்ம், கிங்ஸ் ரேஞ்ச் ரிசாட், தீனதயாளன் ரிசாட், சாஜித்கான், ஹான் பில் கிளப், மவுண்ட் மிஸ்ட் ரிசாட், கிளன் வியூ ரிசாட், நிக்கேரா நீல்கிரிஸ், ஆனசோலை லாட்ஜ், எக்கோ கேம்ப், ஜெனிபர் பிரிசில்லா கிறிஸ்டி தாஸ், நிஜாமுதீன், நார்தன் ஹே எஸ்டேட், தி வைல்டுஸ், வெஸ்டர்ன் பார்ம் ரிசாட், வைல்டு இன், வைல்டு அட்வெஞ்சர் பார்ம் ஹவுஸ், எலிபென்ட் என்கிளைவ், தாமோதரன் ஆகியவை ஆகும்.

நீலகிரி மாவட்ட கலெக்டரிடம் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டிய விடுதிகளின் பெயர் விவரம்:-

ரோலிங் ஸ்டோன், ஜங்கிள் ரிட்ரீட், மோனார்க் சபாரி பார்க், ஜங்கிள் ஹட், பாரஸ்ட் ஹில்ஸ் பார்ம் கெஸ்ட் ஹவுஸ், டீ ராக் ரிசாட், வைல்டு ஹெவன், காசா டீப் வுட் ரிசாட், ஜெயின் ரிசாட், ஆலுக் குப்தா, புளுவேலி ரிசாட், ஷில்வா அண்ட் செரியன் ஆகிய 12 தங்கும் விடுதிகள் ஆகும்.

இது குறித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:-

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி 27 தனியார் விடுதிகளுக்கு நோட்டீசு வழங்கப்பட்டு உள்ளது. மற்ற 12 விடுதி உரிமையாளர்களுக்கு ஆவணங்களை சமர்ப்பிக்க 48 மணி நேரம் கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் மற்ற குடியிருப்புகளில் வசிப்பவர்களின் ஆவணங்களை சரிபார்க்க 2 மாதம் கால அவகாசம் உள்ளது. அந்த குடியிருப்புகளை காலி செய்யவோ அல்லது சீல் வைக்கவோ எந்த உத்தரவும் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பிக்கவில்லை. எனவே அடுத்த வழக்கு விசாரணையின்போது மற்ற குடியிருப்புகள் குறித்து நீதிபதிகளிடம் கேட்கப்படும். எனவே பொதுமக்களோ, விவசாயிகளோ அச்சப்பட தேவையில்லை.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story