அனைத்து பாசன வாய்க்கால்களையும் உடனே தூர்வார வேண்டும்


அனைத்து பாசன வாய்க்கால்களையும் உடனே தூர்வார வேண்டும்
x
தினத்தந்தி 11 Aug 2018 3:39 AM IST (Updated: 11 Aug 2018 3:39 AM IST)
t-max-icont-min-icon

வீராணம் ஏரி நீர் கடைமடை பகுதி வரை செல்ல அனைத்து பாசன வாய்க்கால்களையும் உடனே தூர்வார வேண்டும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விவசாயிகள் கூறினர்.

சிதம்பரம், 



வீராணம் ஏரியில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறப்பது சம்பந்தமான ஆலோசனை கூட்டம் சிதம்பரம் ரெயில் நிலையம் அருகே உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அன்பரசு தலைமை தாங்கினார்.

சிதம்பரம் கோட்டாட்சியர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். வேளாண்மை துறை நேர்முக உதவியாளர் கிருபாகரன், உதவி செயற்பொறியாளர்கள் குமார், அருணகிரி, கொள்ளிடம் கீழணை பாசன விவசாயிகள் சங்க தலைவர் விநாயகமூர்த்தி, காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் இளங்கீரன், கிள்ளை ரவீந்திரன் உள்பட ஏராளமான விவசாயிகள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் கடைமடை பகுதியில் உள்ள நீர்நிலைகளை முழுமையாக தூர்வார வேண்டும். கிராம பகுதியில் உள்ள ஏரி, குளம், குட்டைகளுக்கு மழைநீர் தடையின்றி செல்லும் வகையில் வடிகால் வாய்க்கால்களை தூர்வார வேண்டும். வீராணம் ஏரியில் இருந்து வருகிற 25 அல்லது 26-ந் தேதியில் தண்ணீர் திறக்கப்பட உள்ளது. அதனால் வீராணம் ஏரி தண்ணீர் கடை மடை பகுதி வரை செல்ல வசதியாக அனைத்து பாசன வாய்க்கால்களையும் உடனே தூர்வார வேண்டும்.

சிதம்பரம் அருகே தில்லைவிடங்கன் பகுதியில் உள்ள சித்தோடையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். மேலும் கடந்த காலங்களில் நீர் நிலைகளை தூர்வாரும் பணியின் போது, பொதுப்பணித்துறை அதிகாரிகள் முறையாக தூர்வார நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டினர்.

பின்னர் விவசாயிகள் கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அன்பரசுவிடம் கொடுத்தனர். மனுவை பெற்றுக் கொண்ட செயற்பொறியாளர் அன்பரசு, பாசன வாய்க்கால்களை தூர்வார விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதில் விவசாய சங்கத்தினர் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story