விருதுநகர் பகுதியில் பொது குடிநீர் குழாய்கள் மூடல், நகரசபை நிர்வாகம் மறுபரிசீலனை செய்ய கோரிக்கை


விருதுநகர் பகுதியில் பொது குடிநீர் குழாய்கள் மூடல், நகரசபை நிர்வாகம் மறுபரிசீலனை செய்ய கோரிக்கை
x
தினத்தந்தி 10 Aug 2018 11:00 PM GMT (Updated: 10 Aug 2018 10:39 PM GMT)

விருதுநகரில் பொது குடிநீர் குழாய்களை நகராட்சி நிர்வாகம் மூடி வருவதால் அவர்கள் குடிநீருக்கு தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இம்முடிவினை மறுபரிசீலனை செய்து குழாய்களை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

விருதுநகர்,

விருதுநகர் நகராட்சி பகுதியில் நகராட்சி நிர்வாகம் 8 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்து வரும் நிலை இருந்து வருகிறது. பெரும்பாலான வீடுகளில் குழாய் இணைப்பு இருந்தபோதிலும் ஏழை, எளிய மக்கள் வாடகை வீடுகளில் வசித்துவரும் நிலையில் வீட்டு குடிநீர் இணைப்புகள் இல்லாத நிலையில் குடிநீர்தேவைக்கு பொது குடிநீர் குழாய்களையே நம்பி உள்ளனர். விருதுநகரில் பல பகுதிகளில் 25 முதல் 30 ஆண்டுகளுக்கு மேல் பொதுக்குடிநீர் குழாய்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் விருதுநகர் நகராட்சி நிர்வாகம் நகரின் பல்வேறு இடங்களில் ஏழை, எளிய மக்களின் பயன்பாட்டில்இருந்து வந்து பொது குடிநீர் குழாய்களை மூடி விட்டது. விருதுநகர் டி.டி.கே.சாலை, கந்தபுரம் தெரு, கச்சேரி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் நீண்ட நாட்களாக பயன்பாட்டில் இருந்து வந்த தெருக்குழாய்கள் மூடப்பட்டு விட்டன. இது பற்றி நகராட்சி நிர்வாகத்தால் முன் அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை.

இதனால் இத்தெருக் குழாய்களை தங்கள் குடிநீர் தேவைக்கு நம்பி இருக்கும் ஏழை, எளிய மக்கள் குடிநீர் கிடைக்காமல் தவிப்புக்குள்ளாகி உள்ளனர். இதுபற்றி முன்னாள் எம்.எல்.ஏ. வரதராஜன் கூறியதாவது:-

விருதுநகர் டி.டி.கே.ரோட்டில் எனது அலுவலகம் அருகே பொது குடிநீர் குழாய் 25 ஆண்டுகளுக்கு மேல் ஏழை, எளிய மக்களின் பயன்பாட்டில் இருந்து வருகிறது. பொதுமக்களால் அரசமரத்து குழாய் என்று அழைக்கப்படும் இந்த குடிநீர் குழாயில் தான் பாத்திமாநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் ஏழை, எளிய மக்கள் குடிநீர் எடுத்து செல்வது வழக்கம். ஆனால் இந்த குழாய் அடைத்து விட்டதால் அவர்கள் குடிநீர் கிடைக்காமல் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இது பற்றி கமிஷனரிடம் கேட்ட போது பொதுக்குடிநீர் குழாய்களை அடைக்க அரசு உத்தரவிட்டு உள்ளதாகவும், பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார். மாத வாடகையாக ரூ.500 கூட கொடுக்க முடியாமல் சிறு குடிசைகளில் வசித்து வரும் ஏழை, எளிய மக்கள் வீட்டு குடிநீர் இணைப்பு வாங்குவதற்கு வாய்ப்பு இல்லாத நிலையில் அவர்களுக்கு குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டியது நகராட்சியின் கடமை என கமிஷனரிடம் வலியுறுத்தி கூறியுள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

விருதுநகர் நகராட்சி பகுதியில் விசைபம்புகள் பழுதுபட்டுவிட்ட நிலையிலும், பல பொது குடிநீர் குழாய்கள் பயன்படுத்த முடியாமல் உள்ள நிலையிலும் ஏழை, எளிய மக்கள் வசிக்கும் பகுதியில் பயன்பாட்டில் உள்ள பொது குடிநீர் குழாய்களை முன் அறிவிப்பு இன்றி மூடுவது என்பது ஏற்புடையது அல்ல. பொதுமக்களுக்கு அடிப்படை வசதியை செய்து தர வேண்டிய நகராட்சி நிர்வாகம் இருக்கும் வசதியை பறிப்பது என்பது விதிமுறைகளுக்கு முரணானதாகும்.

எனவே நகராட்சி நிர்வாகம் ஆய்வு செய்து பயன்பாட்டில் இல்லாத பொது குடிநீர் குழாய்கள் எவை என கண்டறிந்து அவற்றை வேண்டுமானால் அடைக்கலாமே தவிர பயன்பாட்டில் உள்ள பொது குழாய்களை மூடுவது என்பது ஏற்புடையது அல்ல. மொத்தத்தில் அரசு உத்தரவிட்டுள்ளதாக கூறி பயன்பாட்டில் உள்ள பொது குடிநீர்குழாய்களை மூடுவதுதற்கு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதை கைவிட்டு மூடப்பட்ட பொது குடிநீர் குழாய்களை ஏழை மக்களின் பயன்பாட்டிற்கு மீண்டும் கொண்டு வர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் ஆகும். எனவே இதில் மறுபரிசலனை செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது. 

Next Story