மாவட்ட செய்திகள்

ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக போலீஸ் இன்ஸ்பெக்டர், ஏட்டு கைது போலீசார் நடவடிக்கை + "||" + Rupees 5 thousand bribe Police Inspector, The police arrested the arrest of the accused

ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக போலீஸ் இன்ஸ்பெக்டர், ஏட்டு கைது போலீசார் நடவடிக்கை

ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக போலீஸ் இன்ஸ்பெக்டர், ஏட்டு கைது போலீசார் நடவடிக்கை
கொளத்தூரில் பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிளை வழக்குப்பதிவு செய்யாமல் திரும்ப ஒப்படைக்க, கூலித்தொழிலாளியிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் ஏட்டுவை சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
கொளத்தூர்,

சேலம் மாவட்டம், கொளத்தூரை அடுத்த சின்ன தண்டா பகுதியில் கடந்த 3-ந் தேதி சட்டவிரோதமாக சேவல் சூதாட்டம் நடந்துள்ளது. அப்போது அங்கு கொளத்தூர் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் மற்றும் போலீசார் வந்தனர். அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர். இதைத்தொடர்ந்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த 18 மோட்டார் சைக்கிள்களையும், கொளத்தூர் போலீசார் பறிமுதல் செய்தனர்.


இந்த நிலையில் மேட்டூர் அனல்மின் நிலையத்தில் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வரும் மேட்டூர் அம்மன் நகரை சேர்ந்த செந்தில் (வயது 31) என்பவரும் சேவல் சூதாட்டத்தை வேடிக்கை பார்க்க சென்றதாக கூறப்படுகிறது. இந்த அதிரடி சோதனையின் போது, செந்திலின் மோட்டார் சைக்கிளையும், கொளத்தூர் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிளை திரும்ப பெற செந்தில், கொளத்தூர் போலீஸ் நிலையத்திற்கு சென்றார். அங்கு ரூ.5 ஆயிரம் கொடுத்தால் மட்டுமே வழக்குப்பதிவு செய்யாமல் வண்டியை திருப்பி தர முடியும் என கொளத்தூர் இன்ஸ்பெக்டர் ரவிந்திரன், ஏட்டு இளங்கோ ஆகியோர் செந்திலிடம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் லஞ்சம் தர விரும்பாத செந்தில், சேலம் லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரிடம் இது குறித்து புகார் அளித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரின் அறிவுறுத்தலின் படி செந்தில் நேற்று ரூ.5 ஆயிரம் மதிப்பிலான ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொளத்தூர் போலீஸ் நிலையத்திற்கு எடுத்து சென்று இன்ஸ்பெக்டர் ரவீந்திரனிடம் கொடுத்துள்ளார்.

அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், இன்ஸ்பெக்டர் ரவிந்திரனை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் லஞ்சம் கேட்டது தொடர்பாக ஏட்டு இளங்கோவையும், லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டனர். இந்த சம்பவம் கொளத்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.