சின்னாளபட்டி அருகே விவசாயி அடித்து கொலை? போலீசார் விசாரணை
சின்னாளபட்டி அருகே விவசாயி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் அடித்து கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சின்னாளபட்டி,
சின்னாளபட்டி அருகே உள்ள ஏ.வெள்ளோடு கிராமத்தை சேர்ந்தவர் ஜார்ஜ்குமார் (வயது 42). விவசாயி. இவர், தனது குடும்பத்துடன் சிறுமலை அடிவாரத்தில் வேளாங்கண்ணிபுரத்தில் உள்ள தோட்டத்து வீட்டில் தங்கியிருந்து விவசாயம் செய்து வந்தார். நேற்று மதியம் இவர், தனது வீட்டருகே மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து அம்பாத்துரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல், திண்டுக்கல் புறநகர் போலீஸ் துணை சூப்பிரண்டு கோபால், அம்பாத்துரை இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
பின்னர் ஜார்ஜ் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அம்பாத்துரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலையில் பலத்த காயத்துடன் முகம் சிதைந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததால் அவர் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸ் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, தான் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியுடன் வயல் வரப்பில் நடந்து சென்றபோது ஜார்ஜ்குமார் தடுமாறி கீழே விழுந்தார். அப்போது துப்பாக்கியில் இருந்த குண்டு, ஜார்ஜ்குமாரின் தொடையில் பாய்ந்து மற்றொரு கால் வழியாக வெளியேறியது.
இதில் படுகாயம் அடைந்த அவர் குணமான நிலையில், தற்போது மர்மமான முறையில் வீட்டின் அருகே காயத்துடன் இறந்து கிடந்தது போலீசாருக்கு சந்தேகத்தை கிளப்பி உள்ளது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக ஜார்ஜ் குமாரின் மனைவி பாத்திமா தெரஸ்மேரியிடம் போலீசார் துருவி, துருவி விசாரிக்கின்றனர்.
Related Tags :
Next Story