புவி வெப்பமயமாதலால் வாடும் வாத்துக்குஞ்சுகள்
புவி வெப்பமயமாதல் எனப்படும் பூமி வெப்பநிலை உயர்வு, மனிதகுலத்தை மட்டுமின்றி மற்ற உயிரினங்களையும் பாதித்து வருகிறது.
ஆர்ட்டிக் பிரதேசத்தில் வாழும் பெர்னாக்கில் வாத்துகள் எனப்படும் ஒரு வகை கருப்பு வாத்துகள், புவி வெப்பமயமாதலால் தாங்கள் வாழும் பகுதியில் இருந்து இனப்பெருக்கத்துக்காக வடக்கு நோக்கி வேகமாகப் பறப்பதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
அந்தப் பறவைகள் வேகமாகப் பறப்பதால், அவை இனப்பெருக்கத்துக்காக ரஷ்யாவில் உள்ள ஆர்ட்டிக்கின் மற்றொரு பகுதியைச் சென்றடையும் போது பெரும்பாலும் உடல் வலிமையை இழந்துவிடுகின்றன. அதனால் உடனே முட்டை இடுவதற்கு போதிய தெம்பு இல்லாமல், தாமதமாகவே அவை முட்டை இடுகின்றன.
இதனால் குஞ்சு பொரிப்பதற்கும் தாமதம் ஆகிறது. அதற்குள் அந்த வாத்துகள் குடியேறிய பகுதிகளில் அவற்றுக்கான உணவு குறைந்து விடுவதால், புதிதாகப் பொரித்த குஞ்சுகளுக்கு போதிய உணவு கிடைப்பதில்லை. இதன் காரணமாக, மிகச் சில குஞ்சுகளே உயிர் தப்பும் சூழல் ஏற்படுகிறது.
அந்த வாத்துக் குஞ்சுகள் உயிர் பிழைக்க வேண்டுமானால், தாங்கள் குடிபெயர்வதற்கான பயணத்தை இந்தப் பறவைகள் முன்கூட்டியே தொடங்க வேண்டும். அதன்மூலம், முட்டையிடு வதில் உண்டாகும் தாமதம் ஈடுசெய்யப்படும் என்று இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ள ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஒவ்வொரு வசந்த காலத்தின் தொடக்கத்திலும், இந்த வாத்துகள் வடக்குக் கடல் பகுதியில் இருந்து ரஷ்யாவில் உள்ள ஆர்ட்டிக் பிரதேசத்துக்கு இனப்பெருக்கத்துக் காகச் செல்லும். அவ்வாறு செல்லும்போது பால்ட்டிக் கடலை ஒட்டியுள்ள பகுதிகளில் ஓய்வெடுத்துவிட்டு, உணவு உட்கொண்டுவிட்டுச் செல்வது இவற்றின் வழக்கம்.
‘‘பருவநிலை மாற்றத்தால் ஆர்ட்டிக் பிரதேசத்தில் வசந்தகாலம் முன்கூட்டியே வந்துவிடுகிறது. ஒன்றும் அறியாமல் தங்கள் இனப்பெருக்கத்துக்கான இடத்தை நோக்கிப் பயணிக்கத் தொடங்கும் அந்த வாத்துகள் பாதி வழியில் இருக்கும்போது, முன்கூட்டியே வந்த வசந்த காலத்தால் தாவரங்களில் பசுமை உண்டாகத் தொடங்கும். ஆனால், தாங்கள்தான் தாமதமாகப் பறப்பதாகக் கருதி அந்த வாத்துகள் வேகமாகப் பறக்கத் தொடங்குகின்றன என்று கருதுகிறோம்’’ என நெதர்லாந்து சூழலியல் நிறுவனத்தைச் சேர்ந்த பார்ட் நோலெட் கூறுகிறார்.
ரஷ்ய ஆர்ட்டிக் பிரதேசத்துக்கு வேகமாகச் செல்ல வேண்டும் என்ற நோக்கில் பறப்பதால் உணவு மற்றும் ஓய்வுக்காக பால்ட்டிக் பகுதியில் இடைநிற்காமல் செல்வதால், அவை ரஷ்யாவைச் சென்றடையும்போது உடல் ஆரோக்கியம் இல்லாமல் போகிறது.
‘‘பெண் வாத்துகள் தங்கள் முட்டைகளை மூன்று வார காலம் தொடர்ந்து அடைகாக்கும். பயணத்தின் இடையில் நின்று அவை உண்ணாததால், வலிமை இழந்த அந்தப் பறவைகள் உடனடியாக முட்டையிட முடிவதில்லை’’ என்கிறார் பேராசிரியர் நோலெட்.
வழக்கமாக வசந்த காலத்துக்கு முன்னரே அந்தப் பறவைகள் குஞ்சு பொரித்துவிடும். அதனால் உணவுக்கான உச்ச காலம் என்று ஆய்வாளர்கள் கூறும் வசந்த காலத்தை அவற்றால் பயன்படுத்திக்கொள்ள முடிந்தது. ஆனால், வழக்கத்துக்கு முன்னரே வசந்த காலம் வருவதால், தாமதமாகப் பொரிக்கும் பறவைக் குஞ்சுகளுக்கு அந்த உணவு கிடைப்பதில்லை. அதனால், கோடைக்காலம் வரை பல வாத்துக்குஞ்சுகள் உயிர் வாழ்வதில்லை என்கின்றனர் ஆய்வாளர்கள்.
இந்தப் பிரச்சினையில் இருந்து அந்த வாத்துகள் மீண்டு வரவேண்டுமானால் தங்கள் குளிர்கால வசிப்பிடத்தை விட்டு அவை முன்கூட்டியே பறக்கத் தொடங்கத் தங்களைத் தாங்களே தகவமைத்துக்கொள்ள வேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஆனால், குளிர் காலம் முடிந்து எந்தச் சமயத்தில் பகல் பொழுதின் நீளம் அதிகமாகத் தொடங்கு கிறதோ அப்போதுதான், இனப்பெருக்கத்துக்கு புறப்பட உகந்த காலம் என்று கருதி வாத்துகள் தங்கள் பயணத்தைத் தொடங்குகின்றன.
இந்த பெர்னாக்கில் வாத்துகள் சிலசமயம் நிலவு வெளிச்சம் அதிகமாக இருக்கும் இரவுகளில் மேய்ச்சலுக்குப் போகும் வழக்கத்தைக் கொண்டுள்ளன.
‘‘அத்தகைய இரவுகளில் அவை தீவனம் உட்கொள்ளும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொண்டால், அப்பறவைகளால் முன்கூட்டியே போதிய உணவை உட்கொண்டுவிட்டு, முன்கூட்டியே தங்கள் இலக்கைச் சென்றடைய முடியும்’’ என நோலெட் கூறுகிறார்.
புவி வெப்பமயமாதல், பறவைகளையும் பாதிப்பது பரிதாபம்தான்!
Related Tags :
Next Story