மாவட்ட செய்திகள்

மனம் கவரும் ‘மண் வாசனை’யின் ரகசியம்! + "||" + The secret of soil fragrance

மனம் கவரும் ‘மண் வாசனை’யின் ரகசியம்!

மனம் கவரும் ‘மண் வாசனை’யின் ரகசியம்!
மழை பெய்யத் தொடங்கும்போது எழும் மண் வாசனை நாசி வழியாகப் புகுந்து நம்மைக் கவர்கிறது.
மண் வாசனைக்குப் பின்னால் அறிவியல் இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா?

இடியுடன் கூடிய மழை பெய்தபிறகு ஈரமான நிலத்திலிருந்து ஒரு நல்ல வாசம் வருவதற்குக் காரணமாக பாக்டீரியா, செடிகள் மற்றும் மின்னல் ஆகியவை உள்ளன.

‘பெட்ரிகோர்’ எனப்படும் அந்த வாசனை குறித்து அறிவியல் அறிஞர்கள் நீண்டகாலமாக ஆராய்ந்துவருகிறார்கள். வாசனைத் திரவியம் தயாரிப்பவர்களும் மண் வாசனை குறித்து முழுமையாக அறிந்துகொள்ள ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.

மழை வறண்ட நிலத்தை அடைந் தவுடன் வரும் வாசனைக்குக் காரணமானவை ஒரு வகை பாக்டீரியாக்கள். இவை நிலத்தில் அபரிமிதமாக இருக்கின்றன என ஜான் இன்நெஸ் மையத்தின் மூலக்கூறு நுண்ணுயிரியியல் துறைத் தலைவர் பேராசிரியர் மார்க் பட்னர் கூறுகிறார்.

‘‘நீங்கள் ஈரமான மண் வாசனையை நுகர்வதாகக் கூறுகிறீர்கள் என்றால், உண்மையில் நீங்கள் ஒரு வகை பாக்டீரியாவிலிருந்து வரும் மூலக்கூறுகளை நுகர்கிறீர்கள் என அர்த்தம்’’ எனச் சொல்கிறார் அவர்.

‘ஜியோஸ்மின்’ எனும் அந்த மூலக்கூறு, ஸ்டிரெப்டோமைசஸ் பாக்டீரியாக்களால் உருவாகிறது. பெரும்பாலும் நல்ல ஆரோக்கியமான மண்ணில் இந்த பாக்டீரியா இருக்கிறது. இப்பாக்டீரியாக்கள் ஆன்டிபயாடிக் மருந்துகளைத் தயாரிக்கவும் உதவுகின்றன.

மழைநீர்த் துளிகள் மண்ணை அடையும்போது ஜியோஸ்மின் காற்றில் வெளியிடப்படுகிறது. மழை பெய்ததற்குப் பிறகு இவை ஏராளமாக வெளிவருகின்றன. ஜியோஸ்மின் தற்போது பரவலாக வாசனைத் திரவிய மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.

‘‘இது மிகவும் ஆற்றல்மிக்க மூலப் பொருளாக இருக்கிறது. இதனை மிகவும் நீர்த்துபோகச் செய்தாலும் உங்களால் எளிதாக அந்த வாசனையைக் கண்டுபிடித்துவிட முடியும். ஜியோஸ்மினுக்கும் மனிதர்க ளுக்கும் ஒரு வித்தியாசமான தொடர்பு இருக்கிறது. இந்த மூலப் பொருளின் வாசனை மற்றும் சுவை பலருக்கும் பிடிக்காது’’ என்கிறார், வாசனைத் திரவியம் தயாரிக்கும் மரினா பார்சினில்லா.

‘‘இது மனிதர்களுக்கு நஞ்சானது அல்ல என்றாலும், இதன் மிகச் சிறு பகுதியை மனிதர்கள் சுவைக்க, முகர நேர்ந்தாலும் அவர்கள் மிகவும் அசவுகரியத்துக்கு உள்ளாவார்கள். மனிதர்களுக்கு ஏன் ஜியோஸ்மின் பிடிப்பதில்லை என்பது எங்களுக்குத் தெரியவில்லை’’ என்கிறார், டென் மார்க் ஆல்போர்க் பல்கலைக் கழகப் பேராசிரியர் ஜெப்பே லுண்ட் நீல்சன்.

‘பெட்ரிகோர்’ என்ற சொல்லை ஜாய் பியர், ரிச்சர்டு தாமஸ் என்ற இரு ஆராய்ச்சியாளர்கள் 1964-ல் அவர்கள் வெளியிட்ட அர்கில்லெசி யஸ் வாடையின் இயல்பு எனும் கட்டுரையில் பயன்படுத்தினர். அந்தக் கட்டுரை ‘நேச்சர்’ இதழில் வெளியிடப்பட்டது.

பேராசிரியர் நீல்சன் கருத்துப்படி, ஜியோஸ்மின், ‘டெர்பீன்ஸ்’ உடன் தொடர்புடையது என ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. டெர்பீன்ஸ் என்பது பல தாவரங்களின் வாசனைக்கு மூலாதாரமாக இருக்கிறது.

லண்டனின் கீவில் உள்ள ராயல் தாவரவியல் பூங்கா ஆராய்ச்சித் தலைவரான பேராசிரியர் பிலிப் ஸ்டீவன்சன், ‘‘மழையால் இந்த வாசனைகளை வெளியே கொண்டுவர முடியும்’’ என்கிறார்.

‘‘தாவர இலை முடியில் இந்த தாவர ரசாயனங்கள் உற்பத்தி செய்யப்படு கின்றன. மழை பெய்யும்போது சேதப் படுத்தப்பட்டு அந்த தாவர ரசாயனங் களின் கூட்டுப்பொருள்கள் வெளி வருகின்றன’’ என அவர் கூறுகிறார்.

வறண்ட காலநிலையில் தாவரங்களின் வளர்சிதை மாற்றம் தாமதப்படுத்தப்படுகிறது. மழை பெய்யும்போது அவை புத்துணர்வு அடைவதால் தாவரங்கள் இந்த வாசனையை வெளிவிடுகின்றன.

இடி, மின்னலுடன் கூடிய மழையும் இதில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது.

மிசிசிபி பல்கலைக்கழகப் பேராசி ரியர் மரிபெத் ஸ்டோல் ஜென்பர்க் இதுகுறித்துக் கூறுகை யில், ‘‘மின்னல் மட்டுமின்றி, இடியும் மழையும், மழைநேர வாசனைக்குக் காரணமாகின்றன. குறிப்பாக மழையானது காற்றின் தரத்தை மேம்படுத்தும். தூசிகள் மற்றும் வாயுக்களில் இருக்கும் திட, திரவ வடிவிலான சிறுபொருட்கள் (ஏரோ சோல்ஸ்) மற்றும் வேறு சில பொருட் கள் மழை பெய்யும்போது வெளியேறி காற்று சுத்தப்படுத்தப் படுகிறது. அதுவும் ஒரு தனித்த வாசனைக்குக் காரணமாகிறது’’ என்கிறார்.

மண் வாசனைக்குப் பின்னே எவ் வளவு விஷயங்கள் இருக்கின்றன!