ஆடி அமாவாசையையொட்டி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் பக்தர்கள் குவிந்தனர்
ஆடி அமாவாசையையொட்டி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் பக்தர்கள் குவிந்தனர். முன்னோர்கள் நினைவாக தர்ப்பணம் கொடுத்தனர்.
ஸ்ரீரங்கம்,
இந்துக்கள் தங்கள் முன்னோர்கள் நினைவாக தை அமாவாசை, ஆடி அமாவாசை நாளில் நீர்நிலைகளில் பூஜைகள் நடத்தி, புனித நீராடி தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க இந்த தினங்கள் உகந்ததாகும். திருச்சியில் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் காவிரி ஆற்றில் பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். இந்த நிலையில் நேற்று ஆடி அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க திருச்சி ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் படித்துறையில் பக்தர்கள் குவிந்தனர்.
ஆற்றில் தண்ணீர் அதிகமாக சென்றதால் தடுப்பு வேலியை தாண்டி பக்தர்கள் புனித நீராட அனுமதிக்கப்படவில்லை. இதனால் தடுப்பு வேலிக்குள் நீராடினர். மேலும் பக்தர்களின் வசதிக்காக ஷவர் வசதியும் ஏற்படுத்தப்பட்டிருந்தன. அதிலும் பக்தர்கள் புனித நீராடினர்.
பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள் என்பதால் படித்துறையில் கரையோரம் புரோகிதர்கள் நேற்று முன்தினம் மாலையே இடம் பிடித்து வைத்திருந்தனர். நேற்று காலை ஒரே நேரத்தில் பக்தர்கள் அதிக அளவில் வந்ததால் அவர்களை வரிசையாக அமர வைத்து புரோகிதர்கள் வேத மந்திரங்களை முழங்கினர். புரோகிதர்கள் கூறியதை பக்தர்களும் கூறினர்.
அதன்பின் வாழைப்பழம், அரிசி, எள் ஆகியவற்றை இணைத்து உருவாக்கிய பிண்டத்தை ஆற்றில் கரைத்து தங்களது முன்னோர்களை நினைத்து, அவர்களது ஆசி வேண்டி வழிபாடு நடத்தினர். நேரம் செல்ல, செல்ல பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. திருச்சி மட்டுமில்லாமல் பக்கத்து மாவட்டங்களை சேர்ந்தவர்களும் அம்மா மண்டபம் படித்துறைக்கு வந்திருந்தனர். ஆற்றில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி தர்ப்பணம் கொடுத்தனர்.
கடந்த ஆண்டு காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லாததால் தர்ப்பணம் கொடுக்க வந்த பக்தர்கள் பெரும் சிரமம் அடைந்தனர். ஆனால் இந்த ஆண்டு ஆற்றில் இரு புறமும் கரையை தொட்டப்படி செல்வதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஆற்றில் தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகுகளில் ரோந்து வந்தப்படி இருந்தனர். மேலும் கரையில் தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் இருந்தனர். கூட்ட நெரிசலில் குற்ற சம்பவங்கள் நடைபெறமால் தடுக்க ஸ்ரீரங்கம் சரக போலீஸ் உதவி கமிஷனர் ராமச்சந்திரன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். கண்காணிப்பு கேமாரக்களும் பொருத்தப்பட்டு போலீசார் கண்காணித்தனர். தர்ப்பணம் கொடுத்தவர்கள் பலர் அங்கிருந்த ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கினர். ஆற்றில் விடப்பட்ட ஆடைகளை அகற்றும் பணியில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர்.
அம்மா மண்டபம் படித்துறையை போல தில்லைநாயகம் படித்துறை, ஓடத்துறை உள்ளிட்ட படித்துறைகளில் பக்தர்கள் பலர் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். மேலும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர், திருவானைக்காவல் கோவில் உள்ளிட்ட கோவில்களில் பக்தர்கள் வழிபாடு நடத்தினர். இதனால் கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.