மன்னார்குடி ராமநாதசாமி கோவிலில் தீர்த்த உற்சவம் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்


மன்னார்குடி ராமநாதசாமி கோவிலில் தீர்த்த உற்சவம் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்
x
தினத்தந்தி 11 Aug 2018 10:30 PM GMT (Updated: 11 Aug 2018 6:46 PM GMT)

திருராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் ஆடி அமாவாசையையொட்டி தீர்த்த உற்சவம் நடந்தது. திருவாரூர் தியாகராஜர் கோவில் கமலாலய குளத்தில் திரளானோர் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

மன்னார்குடி,

மன்னார்குடி-திருத்துறைப்பூண்டி பிரதான சாலையில் தட்டான்கோவிலில் அருகே உள்ளது திருராமேஸ்வரம் கிராமம். பழமை வாய்ந்த இக்கோவிலில் மங்களநாயகி, ராமநாதசாமி வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். ராமாயணம் இதிகாச காலத்தில், இலங்கையில் ராவணன், அவனது அரக்கர் கூட்டத்தை அழித்துவிட்டு திரும்பி வரும்போது ராமர் தனக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தை போக்கி கொள்ள வேண்டி, இந்த திருராமேஸ்வரம் கோவிலுக்கு சீதை, லெட்சுமணன், அனுமனுடன் வந்து ராமநாதருக்கு சிவ பூஜை செய்து, தனது பிரம்மஹத்தி தோஷத்தை போக்கி கொண்டார் என்று தல வரலாறு கூறுகிறது.

இக்கோவிலில் ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை நாட்களில் பக்தர்கள் கோவில் குளத்தில் புனித நீராடி, தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்வது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு ஆடி அமாவாசையையொட்டி திருராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் ஆடி அமாவாசையையொட்டி நேற்று தீர்த்த உற்சவம் நடந்தது. இதையொட்டி பக்தர்கள் கோவில் குளத்தில் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். கோவிலில் மங்களநாயகி, ராமநாதசாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரத்துடன், தீபாராதனை காட்டப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இரவு ராமநாதசாமி குளம் கரைக்கு சென்று தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி அரவிந்தன் மற்றும் பணியாளர்கள், கிராம மக்கள் செய்து இருந்தனர்.

ஆடி அமாவாசையையொட்டி திருவாரூர் தியாகராஜர் கோவிலுக்கு சொந்தமான கமலாலய குளத்தில் திரளான பக்தர்கள் புனித நீராடினர். பின்னர் அவர்கள் கமலாலய குளக்கரையில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். இதனால் திருவாரூர் கமலாலய குளக்கரையில் காலை முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 

Next Story