சிக்னலில் நின்ற வாகனங்களை இடித்து தள்ளிய கன்டெய்னர் லாரி 5 பேர் காயம்


சிக்னலில் நின்ற வாகனங்களை இடித்து தள்ளிய கன்டெய்னர் லாரி 5 பேர் காயம்
x
தினத்தந்தி 12 Aug 2018 4:00 AM IST (Updated: 12 Aug 2018 12:29 AM IST)
t-max-icont-min-icon

டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய கன்டெய்னர் லாரி, சிக்னலில் நின்றிருந்த வாகனங்களை இடித்து தள்ளியது. இதில் அரசு பஸ் உள்பட 8 வாகனங்கள் சேதம் அடைந்தது. 5 பேர் காயம் அடைந்தனர்.

பூந்தமல்லி,

சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பூந்தமல்லியை அடுத்த திருமழிசை சிக்னலில் நேற்று முன்தினம் இரவு ஏராளமான வாகனங்கள் சிக்னலுக்காக நின்று கொண்டிருந்தன. அப்போது ஸ்ரீபெரும்புதூரில் இருந்து சென்னை நோக்கி வந்த கன்டெய்னர் லாரி, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சிக்னலுக்காக சாலையில் அணிவகுத்து நின்ற வாகனங்களுக்கு இடையே புகுந்தது.

அங்கிருந்த வாகனங்களை இடித்து தள்ளியபடி தறிகெட்டு ஓடிய கன்டெய்னர் லாரி, அரசு பஸ் மீது மோதி நின்றது. இதில் 6 கார்கள், 1 லோடு ஆட்டோ மற்றும் ஒரு அரசு பஸ் ஆகியவை முற்றிலும் சேதம் அடைந்தன. கன்டெய்னர் லாரியை அங்கேயே நிறுத்தி விட்டு அதன் டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

இந்த விபத்தில் சேதம் அடைந்த 6 கார்களில் வந்த அஸ்வினி (வயது 36), அவருடைய மகள் பிரித்திகா (8), உசேன் முகமது (34), பிரவீன் (27), தீனதயாளன் (34) ஆகிய 5 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்து வந்த பூந்தமல்லி போக்கு வரத்து புலனாய்வு பிரிவு போலீசார், சேதம் அடைந்த வாகனங்களை கிரேன் மூலம் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.

சம்பவம் தொடர்பாக பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கன்டெய்னர் லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

Next Story