மாவட்ட செய்திகள்

நெற்குன்றத்தில் குப்பையில் கிடந்த மர்மபொருள் வெடித்ததால் பரபரப்பு + "||" + In nerkundram In the trash The mystery exploded

நெற்குன்றத்தில் குப்பையில் கிடந்த மர்மபொருள் வெடித்ததால் பரபரப்பு

நெற்குன்றத்தில் குப்பையில் கிடந்த மர்மபொருள் வெடித்ததால் பரபரப்பு
நெற்குன்றத்தில், குப்பைகளுக்கு இடையே கிடந்த மர்மபொருள் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அது பட்டாசா? அல்லது நாட்டு வெடிகுண்டா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பூந்தமல்லி,

சென்னை கே.கே.நகரைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். நெற்குன்றம் சி.டி.என். நகர், 13-வது தெருவில் இவருக்கு சொந்தமான காலி நிலம் உள்ளது. அந்தஇடத்தில் அப்பகுதி பொதுமக்கள், குப்பைகளை கொட்டி வருகின்றனர்.


நேற்று முன்தினம் இரவு இந்த குப்பைகளுக்கு இடையே கிடந்த மர்மபொருள் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்தது. அந்த அதிர்வில் அருகில் உள்ள வீடுகளில் இருந்த பொருட்கள், ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கியதாகவும் தெரிகிறது.

இதனால் வீடுகளில் இருந்த பொதுமக்கள் அலறியடித்து வெளியே ஓடிவந்து பார்த்தனர். இதுகுறித்து கோயம்பேடு போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற கோயம்பேடு போலீசார், சென்னை மாநகராட்சி ஊழியர்கள் உதவியுடன் அங்கிருந்த குப்பைகளை அகற்றி விட்டு பார்த்தனர். அங்கு கோவில் திருவிழாக்களில் சாமி ஊர்வலத்தின்போது வெடிக்கப்படும் நாட்டு பட்டாசுகள் கிடப்பதும், அதில் சில பட்டாசுகள் வெடிக்காமல் இருப்பதையும் கண்டு அதை கைப்பற்றினார்கள்.

ஆனால் உண்மையில் அங்கு வெடித்தது அந்த பட்டாசுகள்தானா?. அல்லது மர்மநபர்கள், நாட்டு வெடிகுண்டுகளை வீசி விட்டு, போலீசாரின் கவனத்தை திசை திருப்ப நாட்டு பட்டாசுகளை வீசி சென்றார்களா? என்பது தெரியவில்லை. இதுபற்றி பல்வேறு கோணங்களில் கோயம்பேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

குப்பைகள் கொட்டப்படும் அந்த பகுதியில் பொதுமக்கள் யாரும் செல்லாத வகையில் அங்கு இரும்பு தடுப்புகளை போலீசார் அமைத்து உள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.