சிலை திருட்டு வழக்கு: சுபாஷ்சந்திரகபூர் உள்பட 6 பேர் கும்பகோணம் கோர்ட்டில் ஆஜர்


சிலை திருட்டு வழக்கு: சுபாஷ்சந்திரகபூர் உள்பட 6 பேர் கும்பகோணம் கோர்ட்டில் ஆஜர்
x
தினத்தந்தி 11 Aug 2018 10:15 PM GMT (Updated: 11 Aug 2018 7:40 PM GMT)

சிலை திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்தியசிறையில் அடைக்கப்பட்டுள்ள சுபாஷ்சந்திரகபூர் உள்பட 6 பேரை கும்பகோணம் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கு விசாரணையை வருகிற 21-ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

கும்பகோணம்,

அரியலூர் மாவட்டம் சித்தமல்லி வரதராஜ பெருமாள் கோவிலில் கடந்த 2008-ம் ஆண்டு 20 சாமி சிலைகள் திருட்டு போனது. இதைப்போல ஸ்ரீபுரந்தான் பிரகதீஸ்வரர் கோவிலிலும் அதே ஆண்டு 8 சிலைகள் திருட்டு போனது. இந்த 2 கோவில் சிலை திருட்டு வழக்கிலும் தொடர்புடைய சுபாஷ்சந்திரகபூர் என்பவரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இதைத்தொடர்ந்து திருச்சி மத்தியசிறையில் அடைக்கப்பட்டிருந்த சுபாஷ்சந்திரகபூர் உள்பட அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த சஞ்சீவிஅசோகன், மாரிச்சாமி, ஸ்ரீராம்சுலோகு, பாக்யகுமார், பார்த்திபன் ஆகிய 6 பேரை போலீசார் கும்பகோணம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி அய்யப்பன்பிள்ளை வருகிற 21-ந் தேதிக்கு(செவ்வாய்க்கிழமை) விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் இதுவரை அரசு தரப்பு சாட்சியங்களாக 15 பேர் விசாரிக்கப்பட்டுள்ளனர். 16-வது சாட்சியாக அப்ரூவரான பிச்சுமணியிடம் விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 

Next Story