மாவட்ட செய்திகள்

தலைமை ஆசிரியர் முயற்சியால் டிஜிட்டல் மயமான ஊராட்சி ஒன்றிய பள்ளி + "||" + Try the headmaster Digital Conservatory Union School

தலைமை ஆசிரியர் முயற்சியால் டிஜிட்டல் மயமான ஊராட்சி ஒன்றிய பள்ளி

தலைமை ஆசிரியர் முயற்சியால் டிஜிட்டல் மயமான ஊராட்சி ஒன்றிய பள்ளி
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தலைமை ஆசிரியரின் முயற்சியால் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு டிஜிட்டல் முறையில் பாடங்கள் கற்றுத்தரப்படுகின்றன.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு 2 மாதங்களுக்கு முன்னர் தலைமை ஆசிரியராக ஜெயக்குமார் ஞானராஜ் பதவி உயர்வு பெற்று வந்து பொறுப்பேற்றார். அரசு பள்ளியில் அதிக அளவில் மாணவர்களை சேர்க்க வேண்டும் என்ற முழு ஈடுபாட்டுடன் தனது சொந்த செலவில் மாணவர்களுக்கு கராத்தே, யோகா மற்றும் சிலம்பம் கற்றுத் தர ஏற்பாடு செய்தார்.

தற்போது மாணவர்கள் பாட புத்தகம் இல்லாமல், அனைத்து பாடங்களையும் கணினி மூலம் டிஜிட்டல் முறையில் கற்றுத் தர ஏற்பாடு செய்துள்ளார். இதன்படி மாணவர்களுக்கு தேவையான முதல் வகுப்பு பாடங்கள் கியூ.ஆர். கோடு மூலம் ஸ்கேன் செய்யப்பட்டு சி.பி.யூ. வில் பதிவேற்றம் செய்யப்பட்டு மாணவர்களுக்கு திரையிட்டு காட்டப்படுகிறது. ஏனைய வகுப்புகளுக்கு தேவையான பொது அறிவு, பாடங்களுக்கான விசிடி கள் வாங்கப்பட்டு இவை மாணவர்களுக்கு திரையிட்டு காட்டப்படுகிறது. மேலும் யூ டியூப்பிலிருந்து தேவைப்படும் பாடங்கள் பதிவிறக்கம் செய்தும் மாணவர்களுக்கு புரஜெக்டர் மூலம் திரையிட்டு காட்டப்படுகிறது.

இது குறித்து தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் ஞானராஜ் கூறுகையில், மாணவர்கள் பாட புத்தகங்களை பார்த்து படிப்பதைவிட, திரையில் பாடங்களை பார்ப்பதன் மூலம் எளிதில் ஆர்வத்துடன் கற்றுக் கொள்கிறார்கள். மேலும் திருக்குறள், கடவுள் வாழ்த்து உள்ளிட்ட பாடல்களை ராகத்துடன் எளிதில் கற்றுக் கொள்கிறார்கள். ஆங்கில உச்சரிப்பு மிகவும் தெளிவாக வருகிறது. முதல் இரு வகுப்பு குழந்தைகள் இதன் மூலம் ஏராளமான பாடல்களை கற்றுக் கொள்கிறார்கள். மாணவர்களுக்கு தேவையான பாடம் தொடர்பான விளக்கங்கள், இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்டு அவர்களுக்கு கற்றுத் தரப்படுகிறது என்றார்.

இதற்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது.