கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வந்தபோது ராகுல்காந்தியின் பாதுகாப்பு குறைபாடு குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்


கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வந்தபோது ராகுல்காந்தியின் பாதுகாப்பு குறைபாடு குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
x
தினத்தந்தி 12 Aug 2018 5:00 AM IST (Updated: 12 Aug 2018 1:22 AM IST)
t-max-icont-min-icon

கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வந்தபோது ராகுல்காந்திக்கு அளித்த பாதுகாப்பு குறைபாடு குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று கோபியில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.

கடத்தூர்,

ஈரோடு மாவட்டம் கோபியில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கலந்துகொண்டார். அதன்பின்னர் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு வந்த அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி சென்னை வந்தார். அப்போது அவர் பொதுமக்களோடு சேர்ந்து அஞ்சலி செலுத்துவதற்கு நிறுத்தப்பட்டார். மேலும், அவருக்கு முதல்தர பாதுகாப்பு தரவேண்டும். ஆனால், எந்தவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யவில்லை. இது தமிழக அரசின் கையாலாகாத தனத்தையே காட்டுகிறது.

கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் நரேந்திர மோடி வந்த போது கொடுக்கப்பட்ட பாதுகாப்பு, ராகுல்காந்திக்கு ஏன் தரவில்லை?. இதுகுறித்து தமிழக அரசு பதில் கூறவேண்டும். வருங்கால பிரதமர் ராகுல்காந்திக்கு பாதுகாப்பு குறைபாடு என்பதை சகித்துக் கொள்ள முடியாது. டி.ஜி.பி. அளவில் விசாரணை நடைபெறுவதாக கூறுகிறார்கள். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதை சி.பி.ஐ. விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தி.மு.க. தலைவர் கருணாநிதியைப் பற்றி தேர்தல் நேரங்களிலும், மற்ற சமயங்களிலும் நான் பலமுறை விமர்சனம் செய்திருக்கிறேன். ஆனால், அப்போதெல்லாம் அவர் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. எப்போதும் என்னிடம் பாசத்தோடு பழகுவார். தற்போது நான் அவரை அவ்வாறு விமர்சனம் செய்து விட்டேனே? என்று நினைத்துப் பார்க்கிறேன்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் தினகரன், காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி சேருவதாக கூறியுள்ளார். தினகரன் தனிநபர். தான் அரசியலில் இருப்பதாக காட்டிக் கொள்வதற்காக இப்படி பேசி வருகிறார். காங்கிரசுடன் கூட்டணி பற்றி பேச தினகரனுக்கு அருகதை இல்லை.

தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது. இது வரும் தேர்தலிலும் வெற்றி கூட்டணியாக தொடரும். தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருதை விட உயர்ந்த விருதை மத்திய அரசு வழங்க வேண்டும்.

தமிழகத்தில் லஞ்ச லாவண்யம் தலை விரித்தாடுகிறது. பல லட்சம் வரை லஞ்சம் வாங்கிக்கொண்டு கல்லூரி பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களில் நியமனம் செய்து வருகிறார்கள். இதை உடனடியாக நிறுத்தாவிட்டால், லஞ்ச பட்டியலை விரைவில் வெளியிடுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story