கார் மோதியதில் சமயபுரத்திற்கு பாதயாத்திரை சென்ற தாய்-மகள் உள்பட 3 பேர் பலி


கார் மோதியதில் சமயபுரத்திற்கு பாதயாத்திரை சென்ற தாய்-மகள் உள்பட 3 பேர் பலி
x
தினத்தந்தி 12 Aug 2018 4:30 AM IST (Updated: 12 Aug 2018 2:18 AM IST)
t-max-icont-min-icon

நார்த்தாமலை அருகே கார் மோதியதில், சமயபுரத்திற்கு பாதயாத்திரை சென்ற தாய்-மகள் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.

கீரனூர்,

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வடக்கு வெள்ளாள தெருவை சேர்ந்தவர் லோகஷ்வரன். இவருடைய மனைவி மணிமேகலை (வயது 35), மகள் ஹர்சிதா(6), அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சேவுகமூர்த்தி(17). இவர்கள் 3 பேரும் நேற்று சிங்கம்புணரியில் இருந்து பாதயாத்திரையாக திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு புதுக்கோட்டை வழியாக வந்து கொண்டிருந்தனர்.

நார்த்தாமலை அருகே உள்ள பொம்மாடிமலை என்னும் இடத்தில் புதுக்கோட்டை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது புதுக்கோட்டையில் இருந்து திருச்சி நோக்கி வந்த கார், நடந்து சென்று கொண்டிருந்த மணிமேகலை, ஹர்சிதா, சேவகமூர்த்தி ஆகிய 3 பேர் மீது மோதி விட்டு, நிற்காமல் சென்று விட்டது.

இதில் தூக்கி வீசப்பட்ட மணிமேகலை, சேவுகமூர்த்தி ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். ஹர்சிதா படுகாயமடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தாள். இதைக் கண்ட அந்த வழியாக சென்றவர்கள், கீரனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு கீரனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மைக்கேல் ராயப்பன் தலைமையிலான போலீசார் வந்தனர்.

அவர்கள் படுகாயமடைந்த ஹர்சிதாவை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஹர்சிதாவும் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தாள். இதற் கிடையே மணிமேகலை, சேவுகமூர்த்தியின் உடல்களை போலீசார் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் மோதி விட்டு நிற்காமல் சென்ற காரை அப்பகுதியில் நின்று கொண்டிருந்த இளைஞர்கள் மோட்டார்சைக்கிளில் துரத்தி சென்று பிடித்தனர். பின்னர் அந்த காரின் டிரைவருக்கு தர்ம அடி கொடுத்து, கீரனூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் டிரைவரிடம் விசாரணை நடத்தியதில், அவர் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த பெருமாள் மகன் வடிவேல் (25) என்பது தெரியவந்தது.

இதையடுத்து வடிவேலை போலீசார் கைது செய்தனர். பாதயாத்திரை சென்றபோது, கார் மோதிய விபத்தில் தாய்-மகள் உள்பட 3 பேர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story