உடுமலை அருகே காற்றாலையில் இறக்கைகள் உடைந்து விழுந்ததால் பரபரப்பு
உடுமலையை அடுத்த பாலப்பம்பட்டி பகுதியில் காற்றாலையில் இறக்கைகள் உடைந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மடத்துக்குளம்,
திருப்பூர் மாவட்டம் பல்லடம், உடுமலை மற்றும் சுற்றவட்டார பகுதிகளில் காற்றின் வேகம் சீராக இருந்து வருகிறது. இதனால் இங்கு அதிக அளவில் காற்றாலைகள் நிறுவப்பட்டு மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது. குறிப்பாக உடுமலை அருகே பாலப்பம்பட்டி– மருதூர் சாலையில் நூற்றுக்கணக்கான காற்றாலைகள் நிறுவப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.
தற்போது தென்மேற்கு பருவக்காற்று தீவிரமாக வீசி வருவதால் இந்த பகுதியில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. இதன்காரணமாக இந்த பகுதியில் உள்ள காற்றாலைகளில் மின் உற்பத்தி தீவிரமாக நடந்து வருகிறது. இது ஒரு புறம் இருக்க காற்றாலை மின்சாரத்தை மின்வாரியத்தினர் கொள்முதல் செய்வதில் உள்ள சிக்கல்களால் சில காற்றாலைகள் மின்உற்பத்தியை நிறுத்தி வைத்துள்ளன.
இந்தநிலையில் உடுமலையை அடுத்த பாலப்பம்பட்டி பகுதியில் நேற்று முன்தினம் இரவு வெடிவெடித்தது போல் பயங்கர சத்தம் கேட்டது. இதனால் அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் வெளியில் வந்துபார்த்தனர். அங்கிருந்தவர்கள் வெளியில் வந்துகாற்றாலை ஒன்றில் அதன் இறக்கைகள் பயங்கர சத்தத்துடன் உடைந்து விழுந்தன. இதனால் பாலப்பம்பட்டி கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இரவு நேரம் அந்த பகுதியில் பொதுமக்கள் யாரும் இல்லை என்பதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.