மாவட்ட செய்திகள்

உடுமலை அருகே வீட்டில் பதுக்கி வைத்து இருந்த 1 டன் போலி டீத்தூள் பறிமுதல், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை + "||" + The tea powder was seized in the house

உடுமலை அருகே வீட்டில் பதுக்கி வைத்து இருந்த 1 டன் போலி டீத்தூள் பறிமுதல், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

உடுமலை அருகே வீட்டில் பதுக்கி வைத்து இருந்த 1 டன் போலி டீத்தூள் பறிமுதல், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
உடுமலை அருகே வீட்டில் பதுக்கி வைத்து இருந்த 1 டன் போலி டீத்தூளை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மடத்துக்குளம்,

உடுமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போலி டீத்தூள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட அதிகாரி தமிழ்ச்செல்வனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த 3 நாட்களாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உடுமலை பகுதியில் உள்ள கடைகள், பேக்கரிகள் மற்றும் கடைகளுக்கு டீத்தூள் சப்ளை செய்பவர்களை கண்காணித்து வந்தனர்.

அப்போது உடுமலை அருகே உள்ள அம்மாபட்டியை சேர்ந்த மேகநாதன் என்பவர் மொத்தமாக டீத்தூள் வாங்கி, அதை ¼ கிலோ, ½ கிலோ மற்றும் 1 கிலோ என பாக்கெட்டுகளில் அடைத்து கடைகள் மற்றும் பேக்கரிகளுக்கு விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேற்று இரவு திடீரென்று மேகநாதன் வீட்டிற்கு சென்று அதிரடி சோதனை செய்தனர்.

அப்போது அங்கு பாக்கெட்டுகளில் வைத்து இருந்த டீத்தூள் அனைத்தும் தரம் குறைந்ததாகவும், அதனுடன் ரசாயன கலர் கலந்து இருப்பதும் தெரியவந்தது. அதாவது மட்டரகமான டீத்தூளை வாங்கி, அதை கலப்படம் செய்து பல்வேறு பகுதிகளுக்கு குறைந்த விலையில் வினியோகம் செய்வது தெரியவந்தது. இதையடுத்து அந்த வீட்டில் பதுக்கி வைத்து இருந்த 1 டன் போலி டீத்தூளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் மாதிரி டீத்தூள் எடுத்து பரிசோதனைக்காகவும் அனுப்பி வைக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட 1 டன் போலி டீத்தூளின் மதிப்பு ரூ.2 லட்சம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து மேகநாதனிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். உடுமலை அருகே 1 டன் போலி டீத்தூள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.