மேற்குதொடர்ச்சி மலை பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்
மேற்குதொடர்ச்சி மலை பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
பேரையூர்,
டி.கல்லுப்பட்டி ஒன்றியத்தில் உள்ள கீழப்பட்டி, பாறைபட்டி, தும்மநாயக்கன்பட்டி, தொட்டியபட்டி, ஆவரம்பட்டி உள்பட 10 கிராமங்களில் உள்ள நலிவுற்ற அ.தி.முக. தொண்டர்கள் 163 பேருக்கு உதவிகளை அமைச்சர் உதயகுமார் வழங்கினார். பின்னர் அமைச்சர் உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது, மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்துவிடப்பட்ட நிலையில் மாவட்ட நிர்வாகங்கள் மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தாழ்வான பகுதியில் வசிபவர்கள் மேடான பகுதிக்கு மாற்றப்பட்டு வருகிறார்கள்.
மேலும் மேற்குதொடர்ச்சி மலை பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுஉள்ளது. இந்த பகுதிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.மனிதாபிமான அடிப்படையில் கேரளாவிற்கு உதவிகள் வழங்கப்படும். உசிலம்பட்டி 58 கால்வாய் பணிகள் முடிந்துள்ளன. இதனை முதல்–அமைச்சர் விரைவில் தொடங்கி வைக்க உள்ளார்.
இயற்கை பேரிடர்கள் ஏற்படும் இடங்களில் அப்பகுதியில் உள்ள அரசால் பயிற்சி பெற்ற உள்ளூரில் வசிக்கும்,உள்ளூர் நிலவரம் அறிந்த களப்பணியாளர்கள் செல்வார்கள்.பின்னர் அரசு மீட்பு பணியில் இறங்கும். இதனை செயல்படுத்த ஆய்வு நடைபெறுகிறது. இயற்கை பேரிடர்களை சமாளிக்க அரசு தயாராக உள்ளது. திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் அரசின் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்போம். எய்ம்ஸ் மருத்துமனை, துணைக்கோள் நகர், சாலை, குடிநீர், குடிமராமத்து ஆகிய திட்டங்களை மக்களிடம் முன்நிறுத்துவோம்.
இந்த தொகுதி அ.தி.மு.க.வின் எக்கு கோட்டையாகும். ஆனால் எதிர் அணியில் உள்ளவர்கள் எதை கூறி வாக்கு கேட்பார்கள். வளர்ச்சிப் பணிக்கு முன்னால் டோக்கனுக்கு வாக்காளர்கள் முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள். டோக்கன் முறைக்கு வாக்காளர்கள் ஒருமுறை தான் ஏமாறுவார்கள். அடிக்கடி ஏமாற மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார். உடன் கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.