மாவட்ட செய்திகள்

பொது நில ஆக்கிரமிப்பு சட்டத்தை சிவில் நீதிமன்றங்கள் பின்பற்ற வேண்டும் + "||" + General Land Aggression Act Civil courts should follow

பொது நில ஆக்கிரமிப்பு சட்டத்தை சிவில் நீதிமன்றங்கள் பின்பற்ற வேண்டும்

பொது நில ஆக்கிரமிப்பு சட்டத்தை சிவில் நீதிமன்றங்கள் பின்பற்ற வேண்டும்
பொது நில ஆக்கிரமிப்பு சட்டத்தை சிவில் நீதிமன்றங்கள் பின்பற்ற வேண்டும் என நீதிபதி எம்.வி.முரளிதரன் உத்தரவிட்டுள்ளார்.

மதுரை,

கரூர் மாவட்டம் கட்டளை வாய்க்கால் பகுதியை பலர் ஆக்கிரமித்துள்ளனர். இந்த ஆக்கிரமிப்பை அகற்ற தமிழ்நாடு பொது நில சட்டத்தின்படி கலெக்டர் நடவடிக்கை எடுத்துள்ளார். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மதுரை ஐகோர்ட்டு கிளை ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

இந்தநிலையில் ஆக்கிரமிப்பு செய்தவர்கள், கரூர் சப்–கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தனர். அதில், தற்போதைய நிலையே நீடிக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து கரூர் கலெக்டர் தரப்பில் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.வி.முரளிதரன் பிறப்பித்த உத்தரவு வருமாறு:–

பொது நில ஆக்கிரமிப்பு சட்டத்தை முறையாக அறியாமல் தாக்கல் செய்வதால் தான், சிவில் நீதிமன்றங்களில் அதிக அளவிலான வழக்குகள் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளன. எனவே, இந்த சட்டத்தை சிவில் நீதிமன்றங்கள் பின்பற்ற வேண்டும். அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு ஏற்கப்படுகிறது. கரூர் சப்–கோர்ட்டில் உள்ள வழக்கை விலக்கி கொள்ள வேண்டும். பொது நில ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்குகளில் சிவில் நீதிமன்றங்கள் பின்பற்றி நடக்க வேண்டியது குறித்து, பதிவுத்துறை தரப்பில் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.

தமிழ்நாடு பொது நில சட்டம் மற்றும் தமிழ்நாடு நில ஆக்கிரமிப்பு சட்டப்படி தாக்கலாகி, சிவில் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விலக்கி கொள்வது குறித்து, அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தங்கள் கீழுள்ள அதிகாரிகளுக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். இந்த உத்தரவை நிறைவேற்றுவது குறித்து அனைத்து கலெக்டர்களுக்கும் ஐகோர்ட்டு பதிவுத்துறை அறிவுறுத்த வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.