மாவட்ட செய்திகள்

காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா - திரளான பக்தர்கள் தரிசனம் + "||" + Adi Ammavis festival in Kariyarai Srimamuthu Aiyanar temple - A large number of devotees darshan

காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா - திரளான பக்தர்கள் தரிசனம்

காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா - திரளான பக்தர்கள் தரிசனம்
காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விக்கிரமசிங்கபுரம்,

நெல்லை மாவட்டம் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா கடந்த 2-ந் தேதி கால்நாட்டுதலுடன் தொடங்கியது. ஆடி அமாவாசை திருவிழா நேற்று வெகு விமரிசையாக நடந்தது. விழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று முன்தினம் முதலே கோவில் வளாகத்தில் குவிந்தனர். பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் வளாகத்தில் குடில்கள் அமைக்கப்பட்டு இருந்தன. அங்கு பக்தர்கள் தங்கினர்.


ஆடி அமாவாசை திருவிழாவான நேற்று காலையில் கோவிலின் அருகே ஓடும் தாமிரபரணி ஆற்றில் பக்தர்கள் புனித நீராடினர். பின்னர் கோவிலுக்கு சென்று வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கோவில் அருகே பொங்கல் வைத்து வழிபட்டனர். விக்கிரமசிங்கபுரம் நகரசபை மற்றும் மணிமுத்தாறு நகரப்பஞ்சாயத்து சார்பில் பக்தர்களுக்கு லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டது. மேலும் ஆங்காங்கே குவிந்த குப்பைகளும் உடனுக்குடன் அகற்றப்பட்டன. வனத்துறையினர் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி இந்த ஆண்டும் கோவிலுக்கு செல்ல தனியார் வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் தமிழக அரசு சார்பில் ஏராளமான பஸ்கள் இயக்கப்பட்டன. நெல்லை, நாகர்கோவில், ஆலங்குளம், சேரன்மாதேவி, சுரண்டை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து காணிக்குடியிருப்புக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதையொட்டி விக்கிரமசிங்கபுரம் அருகே அகஸ்தியர்பட்டியில் தற்காலிக பஸ்நிலையம் அமைக்கப்பட்டிருந்தது. அங்கிருந்து கோவிலுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.

வெளியூர்களில் இருந்து கார், வேன்களில் வந்த பக்தர்கள் அகஸ்தியர்பட்டியிலேயே தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு, அங்கிருந்து அரசு பஸ்களில் ஏறி கோவிலுக்கு சென்றனர்.நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக ஆடுகளையும், சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட தங்கள் உடமைகள் அனைத்தையும் கொண்டு வந்திருந்த பக்தர்கள் அரசு பஸ்களில் ஏற்றிச் செல்ல மிகவும் சிரமப்பட்டனர். கோவிலுக்கு செல்ல தனியார் வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் காரையாறு மலைப் பகுதியில் சாலை வெறிச்சோடி கிடந்தது.