சேலத்தில் ரூ.22½ லட்சம் குட்கா பறிமுதல் டிரைவர்கள் உள்பட 4 பேர் கைது


சேலத்தில் ரூ.22½ லட்சம் குட்கா பறிமுதல் டிரைவர்கள் உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 11 Aug 2018 11:03 PM GMT (Updated: 11 Aug 2018 11:03 PM GMT)

சேலத்தில் ரூ.22½ லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வாகன டிரைவர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

சூரமங்கலம்,

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கோவைக்கு தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் சரக்கு வாகனங்களில் கடத்தப்படுவதாக சேலம் சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் கருப்பூர் பெரியார் பல்கலைக்கழகம் அருகே சுங்கச்சாவடியில் நேற்று முன்தினம் இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அதிகாலையில் ஓமலூர் சுங்கச்சாவடியை கடந்து ஒரு சரக்கு வாகனம் கருப்பூர் சுங்கச்சாவடியை நோக்கி வந்தது. அதனை சந்தேகத்தின் பேரில் போலீசார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அந்த வாகனத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர் அடுத்தடுத்து வந்த 2 வாகனங்களை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை நடத்தியதில் அதிலும் குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த வாகனங்களை ஓட்டி வந்த 3 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர்கள் சேலம் குஞ்சுகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சின்னு மகன் கார்த்திக் (வயது 25), தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் சக்திவேல் (23), பென்னாகரம் அருகே பழையூர் கே.புதூர் பகுதியை சேர்ந்த செல்வகுமார் (33) என்பதும், ஒவ்வொரு வாகனத்திலும் 50 கிலோ என மொத்தம் 150 கிலோ குட்கா பொருட்களை வைத்திருந்ததும் தெரியவந்தது.

மேலும் அவற்றை கோவை மற்றும் ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கடத்தி செல்வதற்காக கொண்டு வந்ததும், இதை கடத்தி வரச்சொல்லி சேலம் பள்ளப்பட்டியை சேர்ந்த மாதேஸ் (35) என்பவர் அனுப்பி வைத்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து 3 பேரும் கடத்தி கொண்டு வந்த ரூ.22½ லட்சம் மதிப்புள்ள 150 கிலோ குட்கா பொருட்கள், 3 சரக்கு வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் மாதேஸ் என்பவரும் கைது செய்யப்பட்டார். அவர்களிடம் இருந்த குட்கா பொருட்கள் யாருக்கு கொண்டு செல்லப்படுகிறது, இதற்கு யாருக்கு எல்லாம் தொடர்பு இருக்கிறது என பல்வேறு கோணங்களில் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். மேலும் குட்கா கடத்தல் தொடர்பாக மாதேஸ் மீது ஏற்கனவே சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் வழக்கு உள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட 2 சரக்கு வாகனங்கள் மாதேசுக்கும், ஒரு வாகனம் கார்த்திக்கும் சொந்தமானது. ஒரு வாகனத்தில் கூரியர் என எழுதி அதில் குட்காவை கடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story